மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

யோகி பாபுவைச் சுற்றும் ஹீரோ வாய்ப்புகள்!

யோகி பாபுவைச் சுற்றும் ஹீரோ வாய்ப்புகள்!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில், அதன் பின் வடிவேலு இவர்கள் நடித்த படங்கள் வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வந்தன. தற்போது அந்த இடத்தில் யோகி பாபு உள்ளார். பட்ஜெட் படம் முதல் முன்னணி நடிகர்கள் படம் வரை யோகி பாபுவை காமெடி வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தர்ம பிரபு படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் பிற கதாநாயகர்களின் கால்ஷீட் பெற முடியாத தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் யோகி பாபுவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற பழமொழிக்கேற்ப எந்தப் படத்தையும் தவிர்க்காமல் அனைத்துப் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்ளும் யோகி பாபு ஒரு நாளில் மூன்று ஷிப்டு அடிப்படையில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி நடித்த படங்களில் ஒன்றாக சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரித்திருக்கும் படம் பட்டிபுலம். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இன்னொரு நாயகனாக கலை இயக்குநர் வீர சமர் நடித்திருக்கிறார். கதாநாயகியாக தற்காப்பு படத்தில் நடித்த அமிதாராவ் நடிக்கிறார். சேரன் ராஜ், சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, வல்லவன் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ், “நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததன் மூலம் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டைப் பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலா படி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்தியுள்ளேன்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் உள்ளது. அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதும் தான் கதை. இதை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம். படத்தில் யோகி பாபுவுக்கு பேய் என்று பெயர் வைத்திருக்கிறோம். படம் வரும் மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது” என்றார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon