மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

ஸ்ரீசாந்த்: வாழ்நாள் தடை நீக்கம்!

ஸ்ரீசாந்த்: வாழ்நாள் தடை நீக்கம்!

சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐபிஎல் தொடரின் போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது.

ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த். அவருடைய மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பிசிசிஐ தனது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

பிசிசிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குவதற்கு போதுமானதல்ல. அவர் மீதான தடையை நீக்குவது ஐசிசியின் விதிமுறையை மீறிய செயலாகும். எனவே பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்குவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை. எனவே அவர் மீதான வாழ்நாள் தடை நீக்கப்படுகிறது" எனக் கூறியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல் முறையீடு செய்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஸ்ரீசாந்த் தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் தனது மனுவில் பிசிசிஐ கூறியிருந்தது.

பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஸ்ரீசாந்த் மீதான ஆயுள் தடை நீடிக்கிறது என்று 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனால் தன் மீதான தடையை நீக்க ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இன்று ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்த் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon