மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

பிற்பகலில் தேர்வு: சிரமப்படும் மாணவர்கள்!

பிற்பகலில் தேர்வு: சிரமப்படும் மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் மதிய வேளையில் நடப்பதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் வெளியானது.

நேற்று(மார்ச் 14) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. மொழிப் பாடங்கள் பிற்பகலிலும், மற்ற பாடங்கள் காலையிலும் நடக்கும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

இதுகுறித்து வீரலட்சுமி என்ற மாணவி கூறுகையில், “காலையில் எம்டிசி பேருந்துகள் அடிக்கடி இருக்கின்றன. அதுபோன்று மதிய வேளையில் அடிக்கடி பேருந்துகள் வருவதில்லை. அதனால், போரூரில் உள்ள தேர்வு மையத்துக்கு செல்வதற்குக் கிண்டி பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. தேர்வு பயம் மட்டுமில்லாமல், வெயிலினால் சோர்வடைந்து விடுகிறேன்” என கூறினார்.

பிற்பகலில் தேர்வு நடப்பதால் வெயிலில் ரயில் அல்லது பேருந்துகளைப் பிடித்துத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. வெயிலில் அலைந்து சென்று தேர்வு எழுதுவது நல்ல அனுபவமாக இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “பதினோராம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு காலையில் நடைபெறுவதால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை. தேர்வு மையங்களில் குடிநீர், ஃபேன், மின்சாரம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

சில மாணவர்கள் பிற்பகலில் தேர்வு வைப்பது நல்லது என்று கூறியுள்ளனர். காலையில் தேர்வு நடந்தால் படித்த பாடங்களைக் கடைசியாகத் திருப்பி பார்க்க முடியாது. பிற்பகலில் தேர்வு நடப்பதால், பாடங்களைத் திருப்பி பார்ப்பதற்கு நேரம் கிடைக்கிறது என கூறியுள்ளனர்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon