மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குச் சம்பளம்!

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்குச் சம்பளம்!

பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பொதுத் துறை தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அரசு தரப்பிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியால் அந்நிறுவனம் போதிய வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சம்பளத்தை பிஎஸ்என்எல் இன்னும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக, மாதத்தின் கடைசி நாளிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் நாளிலே சம்பளம் வழங்கப்படும். ஆனால் 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று (மார்ச் 15) வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் அதிகமாக இருக்கும் எனவும், அதில் ஒரு பகுதியை ஊழியர்களின் சம்பளத்துக்காகப் பயன்படுத்தப்போவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீவஸ்தவா மேலும் கூறுகையில், “மார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் ரூ.850 கோடியை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கப் பயன்படுத்தவுள்ளோம்” என்று உறுதியளித்துள்ளார்.

சென்ற பிப்ரவரி மாதம் பிஎஸ்என்எல் அனைத்திந்திய ஊழியர்கள் சங்கம் சார்பாக, 4ஜி அலைக்கற்றையை வழங்குதல், மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துதல், செல் கோபுரங்களின் பராமரிப்பைத் தனியாருக்கு அளிப்பதை எதிர்த்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon