மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

தேர்தல்தான் பதற்றத்துக்குக் காரணம்: இம்ரான்

தேர்தல்தான் பதற்றத்துக்குக் காரணம்: இம்ரான்

இந்தியாவில் நடக்கும் பொதுத்தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்குமென்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் நேற்று (மார்ச் 14) பேசுகையில், "பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுடனும், பாகிஸ்தான் நல்ல உறவைக் கொண்டிருக்கும். இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தலால்தான் பதற்ற நிலை உருவாகியிருக்கிறது. தேர்தல் அரசியல் செல்வாக்கைப் பெறவே வெறுப்பு பரப்பப்படுகிறது" என்றார்.

அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான புதிய பாதையை பாகிஸ்தான் அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறிய இம்ரான், "எல்லா அண்டை நாடுகளுடனும் நல்ல உறவையே பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. அமைதியான பாகிஸ்தான் வளமான பாகிஸ்தானாக இருக்கும்" என்றார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொன்றதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வரும் நிலையில், தேர்தலால்தான் அரசியல் காரணங்களுக்காக பதற்றம் உருவாக்கப்பட்டிருப்பதாக இம்ரான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க விசா சீர்திருத்த நடவடிக்கைகளையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் விசா சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் 175 நாடுகளுக்குப் பொருந்தும். இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் உலக நாடுகளுக்கும் பாகிஸ்தான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உலகம் முடிவதிலுமிருந்தும் பாகிஸ்தானுக்கு வருவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon