மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

கங்கை தூய்மைத் திட்டம்: ரூ.20,000 கோடி வீணா?

கங்கை தூய்மைத் திட்டம்: ரூ.20,000 கோடி வீணா?

கங்கை நதியை தூய்மையாக்க ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் கங்கை நீரின் தரம் மேலும் பன்மடங்கு மோசமடைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.

கங்கை நதியை புனரமைக்கவும், தூய்மையாக்கவும் நமாமி கங்கே திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திட்டம் இலக்கை அடையாமல் படுதோல்வி அடைந்துள்ளதாக சங்கத் மோச்சான் பவுண்டேசன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்குள் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டும், ரூ.20,000 கோடி இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டும் கடந்த 3 ஆண்டுகளில் கங்கை நதியின் நீர் மாசுபாடு மேலும் அதிகரித்துதான் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது, ‘நுண்கிருமிகள் குடிக்கப் பயன்படுத்தும் நீரில் 100 மில்லி லிட்டரில் 50 எம்.பி.என் (மிகவும் சாத்தியமான எண்) கலந்திருக்கலாம். வெளிப்புற பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நீரில் 100 மில்லி லிட்டரில் 500 எம்.பி.என் கலந்திருக்கலாம். இதே அளவு நீருக்கு உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பி.ஓ.டி.) 3 மில்லி கிராம் அல்லது 3 மில்லி லிட்டராக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறது.

ஆனால் கங்கை நதி இந்த அளவுகளையெல்லாம் எப்போதோ கடந்து மிகவும் அசுத்தமடைந்துவிட்டது. கங்கை நதியில் நுண் கிருமிகளின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் நாக்வா பகுதியில் 4.5 லட்சமாகவும், வருணா பகுதியில் 3.8 கோடியாகவும் இருந்தது. பி.ஓ.டி அளவு 2016ஆம் ஆண்டில் 46.8 முதல் 54 மில்லி கிராம் அல்லது மில்லி லிட்டராக இருந்தது. ஆனால் சங்கத் மோச்சான் பவுண்டேசன் தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’கங்கை நதியில் நுண்கிருமிகள் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் நாக்வா பகுதியில் 5.2 கோடியாகவும், வருணா பகுதியில் 14.4 கோடியாகவும் அதிகரித்துள்ளது. பி.ஓ.டி அளவு 66 முதல் 78 மில்லி கிராம் அல்லது மில்லி லிட்டராக அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளது.

கங்கை நதி தூய்மைத் திட்டமானது 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கங்கை நதி மேலும் மாசடைந்திருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை முடிக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்திருந்தாலும், இத்திட்டத்தை 2020க்குள் முடிக்க நிதின் கட்கரி கடந்த காலக்கெடுவை நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon