மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

ராகுல் கல்லூரி விசிட் ரகசியம்!

ராகுல் கல்லூரி  விசிட் ரகசியம்!

கல்லூரி மாணவிகளுடனான ராகுல் காந்தியின் சந்திப்பு அவருக்கு எதிர்பாராத பேராதரவைத் திரட்டித் தந்திருக்கிறது.

மார்ச் 13ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடனான ஒரு திறந்த உரையாடலை நிகழ்த்தினார்.

ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வந்த ராகுல் காந்தியைப் பார்த்து, ‘இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் இவ்வளவு எளிமையாக, இளமையாக இருப்பது ஆச்சரியம்’ என்று கல்லூரி மாணவிகளே பாராட்டினர்.

அதுவும் தன்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம், ராகுல் என்று அழைத்தால் போதும் என்று ராகுல் காந்தி கூற, அதற்கு ஒரு மாணவி, ‘ஹாய் ராகுல்’ என்று அழைத்துவிட்டு நாக்கை நீட்டி வெட்கப்படும் வீடியோ இந்தியா முழுவதும் பரவி மாணவிகள் மத்தியில் ராகுலுக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வி, பொருளாதாரம், தென்னிந்திய, வட இந்திய சமூகச் சூழல் என்று ராகுல் காந்தி ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பிசிறாமல் அளித்த பதில்கள் மாணவிகளைத் தாண்டி அவர்களது பெற்றோரையும் போய் சேர்ந்திருக்கின்றன. இந்தக் கல்லூரி நிகழ்ச்சி பற்றி சென்னையிலிருந்து புறப்பட்டு குமரி செல்லும்போதும் சிலாகித்துக் கொண்டே சென்றாராம் ராகுல். ‘சென்னை மாணவிகள் புத்திசாலிகள்’ என்றும் பட்டம் கொடுத்திருக்கிறார் ராகுல்.

குறிப்பிட்ட அந்த கல்லூரியில் மட்டுமல்ல, யூடியூப் மூலம் இந்தியாவில் இருக்கும் பெருவாரியான மாணவிகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று சேர்ந்திருக்கிறது என்ற தகவலும், இதன் மூலம் இளைஞர்களிடம் ராகுலுக்கான இமேஜ் உயர்ந்திருக்கிறது என்றும் ராகுலுக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்லூரி நிகழ்ச்சி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே சில மணி நேரங்கள் முன்புதான் தெரியவந்திருக்கிறது. சுமார் மூன்று மாதமாகவே இந்த மாணவிகள் சந்திப்பு திட்டத்தை அகில இந்திய மகளிர் காங்கிரஸ் ரகசியமாக ஏற்பாடு செய்து வந்திருந்தது. இதற்கு மாணிக் தாகூர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார். கல்லூரிக்குள் ராகுல் காந்தி சந்திப்புக்கான மேடை ஏற்பாடுகள், ஸ்க்ரீன், ஒலிபெருக்கி என்று அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் செலவுதான். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவானதாகச் சொல்கிறார்கள். ராகுல் காந்தி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பவர் என்பதால் ஏற்கனவே சிலமுறை பாதுகாப்புப் படையினர் வந்து கல்லூரி வளாகத்தை சிலமுறை சோதனையிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மூன்று மாதம் முன்பே திட்டமிட்ட இந்த கல்லூரிச் சந்திப்பு பற்றிய தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தகவல் கசிந்தால் கல்லூரி நிர்வாகத்துக்கு ஏதேனும் இடைஞ்சல் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி தடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருந்தது என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

சென்னை மாணவிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்த நிலையில் இதேபோல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மாணவிகள் சந்திப்பை நடத்தலாம் என்ற யோசனையும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரச்சாரப் பயணத்தின் இடையே இதுபோன்ற சந்திப்புகளுக்கு நேரம் இருக்குமா என்ற கேள்வியும் அதோடு சேர்ந்து எழுந்திருக்கிறது.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon