மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

விஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்!

விஜய் சேதுபதியின் இரண்டாம் பாகம்!

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வெளியாகிவருகின்றன. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாகங்களின் அறிவிப்பு குறையவில்லை. தற்போது முதன்முறையாக விஜய் சேதுபதியை இரண்டாம் பாகம் ஒன்றில் நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த படம் சேதுபதி. காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும் படத்தை விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகக் கொண்டு இயக்கியிருந்தார். தற்போது இந்தக் கூட்டணி சிந்துபாத் திரைப்படத்தை உருவாக்கிவருகிறது. இந்தப் படத்தை வான்ஸன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஆர்வம்காட்டி வருகிறது. இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாவது உறுதியானால் விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகக் கொண்டு அருண்குமார் இயக்கும் நான்காவது படமாக அமையும்.

இந்த ஆண்டு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பேட்ட படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து மாமனிதன், சிந்துபாத், கடைசி விவசாயி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. விஜய் சந்தர், எஸ்.பி.ஜனநாதன், வெங்கடகிருஷ்ண ரோகன், பிரசாத் தீனதயாள் உள்ளிட்டோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டியும் மலையாளத்தில் மார்கோனி மாதாய் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon