மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்!

செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டு: நீதிபதிகள்!

ஆபாச வலைதளங்கள் மற்றும் மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிக பெரும் பிரச்சினைகள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், இணையதளத்தின் பயன்பட்டால் உலகம் ஒவ்வொருவரின் உள்ளங்கையில் உள்ளது. இருந்த இடத்திலேயே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அரசின் பணிகள் உட்பட அனைத்தும் இணையத்தைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், அதனால் ஏற்படும் தீங்குகளும் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளைத் தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஆபத்தான தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை குறித்து, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று (மார்ச் 14) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, செல்போன் கையில் இருக்கும் அணுகுண்டைப் போல பேராபத்தாக உள்ளது. அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற சம்பவங்களுக்குக் காரணம். இது தொடர்பாக அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆபாச வலைதளங்கள், மது ஆகிய இரண்டும் சமூகத்தை மாசுபடுத்தும் மிகப் பெரும் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த தவறினால் இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் இழக்க நேரிடும். பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

இதுகுறித்து இணைய சேவை வழங்குவோர் சங்கச் செயலர், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon