மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..!

உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது..!

கதவைத் தட்டும் பேரழிவு - நரேஷ்

அந்தச் செய்தியைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் இயற்கையின் தொடர்புச் சங்கிலி குறித்த புரிதல் நமக்கு இல்லை.

‘புயல்கள் எப்போது சூறாவளியாக மாறும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. அதற்குப் பருவநிலை மாற்றமும் பனிப்பாறைகளின் அதிவேக உருக்கமும்தான் காரணம்’ என்றது Indian Meteorological Department (IMD).

புயல்களுக்கும் பனிப்பாறைகள் உருகுவதற்கும் சம்பந்தமுண்டா? பொதுவாக, உருவாகும் எல்லாப் புயல்களும் சூறாவளியாக மாறுவதில்லை. அப்படியே மாறுகிறதென்றால் அவற்றைக் கணிக்க முடியும். ஆனால், தற்போது அந்த மாற்றம் அதிவேகமாக இருப்பதால் அவற்றைக் கணிக்க முடியவில்லை என்றும் அதற்குக் காரணம் பருவநிலை மாற்றமும் பனிப்பாறைகளின் அதிவேக உருக்கமும் என்கிறது IMD. இதுவே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

‘Tipping point' என்பது விஞ்ஞான வார்த்தைகளில் அதிகம் புழங்கும் சொல். ‘Saturation point' என்பார்களே, அதுபோல ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றம் அடைவதையோ, நிலைத்தன்மை அடைவதையோ அல்லது முற்றிலும் அழிவதையோ இந்த சொற்கள் கொண்டு குறிப்பார்கள். இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘Tipping point' என்பது முற்றிலும் அழிவதற்கான தொடக்கம்.

உலகத்தில் முரணான பெயர் கொண்ட இரு பகுதிகளை வேடிக்கைக்காகக் குறிப்பிடுவார்கள். Greenland-ம் Iceland-ம்தான் அப்பகுதிகள். பெயர் ஐஸ்லாண்ட். ஆனால், அங்கே பனிக்கட்டிகளைவிடப் பசுமையே இருக்கும். பெயர் க்ரீன்லாண்ட், ஆனால் அங்கே பசுமையைவிட பனிக்கட்டிகளே அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட பனிப்பகுதி இப்போது தனது ‘Tipping point'-ஐ எட்டியுள்ளது.

கடந்த ஒன்பது வருடங்களுக்குள் க்ரீன்லாண்டில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் வேகம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2012இல் தொடங்கிய இந்த அதிவேக உருக்கம், இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. NASA-வின் Gravity Recovery and Climate Experiment (GRACE) திட்டத்தின் ஒரு பகுதியாக க்ரீன்லாண்ட் பனிப்பாறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது என்னவென்றால், 2002இலிருந்து 2016 காலகட்டத்துக்குள் மட்டும் ஒரு வருடத்துக்கு 280 ஜிகா டன் (giga tonne) பனிப்பாறைகள் உருகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

280 ஜிகா டன் என்பது எவ்வளவு என்றால், உலகின் கடல்மட்டத்தை ஒவ்வோர் ஆண்டும் 0.03 அங்குலம் உயர்த்தவல்லது. அந்த வகையில் பார்த்தால், இந்த பனிப்பாறைகளின் உருக்கத்தால் கடந்த 16 வருடத்துக்குள் கடல் மட்டம் கிட்டத்தட்ட 0.5 அங்குலம் உயர்ந்திருக்கிறது.

இதில் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு பேராபத்தும் இருக்கிறது. பனிப்பாறைகளாக மாறியிருப்பது நன்நீர்தான். அவை உருகும்போது ஓடைகளாகவும் நதிகளாகவும் பயணிக்கின்றன. அப்படி நீர் பயணப்படும்போது அவற்றின் இயக்கத்திலிருந்து வெப்பம் உருவாகும். அப்படி உருவாகும் வெப்பத்தால் தன் பாதையில் இருக்கும் பனிக்கட்டிகளையும் உருக்கித் தன்னுடன் அடித்துச்செல்லும். இது நாம் பெரும்பான்மையான இடங்களில் பார்க்கும் யதார்த்த நிகழ்வுதான். ஆனால், இந்த யதார்த்தங்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அவை எச்சரிக்கைகள் ஆகிவிடுகின்றன. பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி ஆறாக ஓடும்போது, ஓடும் நீரிலிருந்து வெளிப்படும் வெப்பத்தால் மேலும் அதிக பனிப்பாறைகள் உருகும். இது ஒரு தொடர் நிகழ்வாக மிகப்பெரிய விளைவு ஏற்படுத்தும் என்பதுதான் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் மிகப்பெரிய அச்சமாக இருக்கும்.

இது எச்சரிக்கை நிலைகூட அல்ல. ’கைவிடப்பட்ட’ நிலை. இது தொடர்ந்தால் பனிப்பாறைகள் உருக்கம் எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதை விஞ்ஞானத்தால் நிச்சயம் கணிக்க முடியாது என்கிறது Ohio State University நடத்திய ஆய்வு.

இதுபோன்ற பனிப்பாறைகளின் உருக்கமும் கடல்நீர் மட்ட உயர்வும் கடல் பகுதியின் வீசும் காற்றின் ஈரப்பதத் தன்மையைத் தடிக்கச் செய்கிறது. அவ்வாறு நிகழும்போது உருவாகும் காற்றழுத்த மண்டலத்தின் போக்கை நிதானிக்க முடியாது. அவை மிக விரைவாக உச்சக்கட்டத்தை அடைகின்றன. அப்படி வீசியதுதான் கடந்த வருட ஒக்கி புயல்.

200க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட ஒக்கி புயல் என்பது வெறும் 12 மணி நேரத்தில் உச்சநிலையை எட்டியது. இவ்வளவு வேகமாகச் சீற்றமடைந்து கணிக்க முடியாததாக மாறிய முதல் புயல் இதுதான் என்கிறார் Indian Meteorological Department (IMD) முதன்மை இயக்குநர் கே.ஜெ. ரமேஷ்.

நம்மால் இயற்கையை வெல்ல முடியாது, முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது, முற்றிலுமாக அழிக்க முடியாது.

இயற்கையிடம் சரணடைவதே நமக்கிருக்கும் ஒரே வழி..!

கடலைக் கொல்லும் மனிதர்கள்!!

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon