மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

மும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!

மும்பை: ரயில்வே மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி!

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம், நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மும்பை நகரத்தில் பரபரப்பாக இயங்கும் பகுதிகளில் ஒன்று சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம். இதன் எதிர்புறத்தை பாதசாரிகள் அடையும் விதமாக, அங்கு ரயில்வே மேம்பாலமொன்று உள்ளது. சாலையின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அதில் பயணித்தவர்கள் கீழேயிருந்த சாலையில் விழுந்தனர். பாலத்தில் இருந்த இரும்பு கம்பிகள், தளம் என மொத்தமாகக் கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாகிப் போனது.

இதில் சிக்கியவர்களை மீட்கும் வகையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேசியப் பேரிடர் மீட்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் அதிமுள்ள நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால், அப்பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு, நேற்று காலையில் பாதசாரிகளை அனுமதித்தவாறே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்துப் பேசிய தேசியப் பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள், அந்த சாலைக்கு முன்புள்ள சிக்னலில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் விபத்து நடந்தபோது வாகனஓட்டிகள் சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மும்பை நடைபாதை மேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுமென்று தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon