மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

ஆசிரியர்களுக்கு ‘கவுன்சலிங்’ தேவை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

ஆசிரியர்களுக்கு ‘கவுன்சலிங்’ தேவை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 33

சென்ற வருடம் கும்பகோணத்துக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் நான் கலந்துகொண்ட தொழில்நுட்பக் கருத்தரங்கில் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கென்று இரண்டு இளம் பேராசிரியர்களை நியமித்திருந்தார்கள்.

ஏற்கெனவே அந்தக் கல்லூரி குறித்துக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் யோசித்தேன். அந்தக் கல்லூரி முதல்வர் ‘நீங்கள் அமைதியாகக் கருத்தரங்கை நடத்துவதற்கு நாங்கள் பொறுப்பு’ என நம்பிக்கை அளித்ததால் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்.

கோட்டுடன் கூடிய எனது Dress Code அவர்களுக்கு வியப்பாக இருந்தது என்பதை அவர்கள் கண்களிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது.

உணவு இடைவேளையின்போது நான் அணிந்திருந்த ருத்திராட்சத்துடன் கூடிய ஸ்படிக மாலையைப் பார்த்து ஒரு பேராசிரியர் ‘மேடம் நீங்கள் சிவபக்தரா?’ என்றார்.

என் பெயரைக் கொண்ட மற்றொரு பேராசிரியர் ஒரு ராசி நட்சத்திரத்தைச் சொல்லி ‘நீங்க இந்த ராசியா?’ என்று கேட்டார்.

தன் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் அவருடைய ராசியும் என் ராசியும் ஒன்றாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டேன் என்று கேட்டதற்கான காரணத்தையும் சொன்னார்.

இப்படியாக அவர்களின் எண்ணங்களும், பேச்சுக்களும் என் ஆடை அணிகலன்கள் மற்றும் பர்சனல் விஷயங்களிலேயே இருந்தன.

ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், ரொபோடிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் தொழில்நுட்பம் குறித்து என நான் பேசிய டாப்பிக் பற்றியெல்லாம் அவர்கள் துளியும் தெரிந்து வைத்திருக்கவில்லை. பர்சனலாகவும் அவை குறித்து என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளவுமில்லை.

நான் நிகழ்ச்சியில் பேச இருக்கும் டாப்பிக்கில் கவனம் செலுத்தினேன்.

நிகழ்ச்சி நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே முடிந்தது.

“சார், உங்கள் கல்லூரி மாணவர்கள் ரொம்பவே சமர்த்தாக இருக்கிறார்கள். பேராசிரியர்களுக்குத்தான் கவுன்சலிங் தேவை. அவர்களுக்காக ஏதேனும் புத்தாக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மாணவர்கள் இன்னும் நல்ல பெயர் எடுப்பார்கள்…” என்று கல்லூரி முதல்வரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு கம்ப்யூட்டர் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதில் தேவையான சாஃப்ட்வேர்கள் இருக்க வேண்டும். வைரஸ் வராமல் இருக்க ஆன்ட்டி வைரஸ் சாஃப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். தினமும் பயன்படுத்தத் தொடங்கும் முன்னர் துடைக்க வேண்டும். பயன்படுத்தாதபோது கவர் போட்டு மூடி வைக்க வேண்டும். இவை எதையுமே செய்யாமல் குப்பையில் போட்டு வைத்திருப்பதைப்போல் போட்டு வைத்திருந்தால் அது எப்படி சரியாக வேலை செய்யும்? ‘ஹேங்’ ஆகத்தான் செய்யும்.

ஒரு கம்ப்யூட்டருக்கே இத்தனை கவனிப்புகள் தேவை என்றால் மாணவர்களுக்கு எத்தனை உயரிய கவனிப்புகள் தேவையாக இருக்கும். இளம் உள்ளங்கள் எதை கவனிக்கிறதோ அதையே உள்வாங்கிக்கொள்ளும்.

‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பதை இந்த வரிசையில் உள்ளவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

சரியானதைக் கொடுக்காமல் ‘மாணவர்கள் சரியில்லை, இளம் தலைமுறையினரே இப்படித்தான்…’ என்று புலம்புவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சரியானதைக் காட்டியும் தரமானதைக் கொடுத்தும் மாணவர்களுக்குள் மாற்றம் வரவில்லை என்றால்தான் மாணவர்களைக் குறை கூற வேண்டும்.

சரியானதைப் புகட்டுவோம் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

கற்போம்… கற்பிப்போம்!

மொழியும் புரிதலும்!

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon