மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 மா 2019

போலி என்கவுன்டர்: இழப்பீடு வழங்க உத்தரவு!

போலி என்கவுன்டர்: இழப்பீடு வழங்க உத்தரவு!

போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி வசந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிவகாசி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களை மேற்கொள் காட்டி, இது போலி என்கவுன்டர் என்பதை உறுதி செய்தார்.

இதைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய நான்கு காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த என்கவுன்டர் வழக்கை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்த நீதிபதி, காவல் துறை செயல்பட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

வெள்ளி, 15 மா 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon