மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 மா 2019

பொன்னொளி படைத்த பாகவதர் - எம்.ஜி.ஆர்.

பொன்னொளி படைத்த பாகவதர் - எம்.ஜி.ஆர்.

இன்று (மார்ச் 1) எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள்

(D.V. பாலகிருஷ்ணன் எழுதிய ‘எம்.கே.டி. பாகவதர்: இசையும் வாழ்க்கையும்’ என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது. நடிகன் குரல் என்னும் இதழ், ‘ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்’ நினைவு மலரை, 1959 டிசம்பரில் வெளியிட்டது. அதில் எம்.ஜி.ஆர் எழுதிய கட்டுரை இது. லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர், தனது இளமைப் பருவத்தில் தியாகராஜ பாகவதரின் ரசிகராக இருந்துள்ளார். பாகவதர் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பும் ஈர்ப்பும் இந்தக் கட்டுரையில் வெளிப்படுகின்றன.)

காலஞ்சென்ற திரு.பாகவதர் அவர்களுக்கு முன் “பாகவதர்” என்ற பட்டத்தைப் பெற்று திறமைமிக்க கலைஞர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், புகழ் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நாடக நடிகரில் காலஞ்சென்ற திரு.எஸ்.வி. சுப்பையா பாகவதரை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். எனினும் திரு.எம்.கே.டி.அவர்கள் விளம்பரம் பெற்ற பின் பாகவதர் என்ற சொல் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒருவரைத்தான் குறிப்பதாக அமைந்துவிட்டது. இது எல்லோருக்கும் சாதாரணமாகக் கிடைக்கும் வாய்ப்பில்லை. ஒரு சிலருக்காவது கிடைக்குமென்று சொல்லக்கூடிய வாய்ப்புமில்லை.

கதாகாலக்ஷேபம் செய்பவர்களில் பல பாகவதர்கள் இருக்கிறார்கள். கச்சேரி செய்பவர்களில் இருக்கிறார்கள். நடிகர்களில்கூட கச்சேரி செய்யும் திறமை பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலர் “பாகவதர்” என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும் நமக்குத் தெரிந்த பாகவதர் திரு.எம்.கே.டி. ஒருவர்தான்.

தற்போது விளம்பரமடைந்துள்ள நடிக நடிகையரை அன்பர்கள் கண்டால் மகிழ்ச்சிப் பெருக்கால் கைதட்டி வரவேற்பதைக் காணுகிறோம். கோயிலிலே சூடம் கொளுத்திக் காண்பிக்கும்போது பக்தர்கள் தம்மை மறந்து ‘ஆஹா…..ஆஹா’ என்று சொல்லுவார்கள். அதுபோல் பாகவதர் அவர்களைக் காணும் மக்கள் கைதட்டுவதோடு மட்டுமல்ல ‘ஆஹா ஆஹா…’ என்று தங்களை மறந்து சொல்லும் சொற்களும் மிக மிகச் சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சி ஆகும்.

இந்த அளவுக்கு பாகவதர் அவர்களின் தோற்றம் பொலிவுள்ளதாக இருந்ததா என்று சிலருக்கு சந்தேகம் தோன்றலாம். நான் மிகைப்படுத்தி எழுதுகிறேனோ என்றுகூட எண்ணலாம். இப்போது தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகம், எதைப் பார்த்தாலும் சந்தேகம். படித்தாலும் பேசினாலும், பேசுவதைக் கேட்டாலும் எதிலும் சந்தேகம், சந்தேகம் சந்தேகம் என்று ஆகிவிட்டிருக்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டிய அளவிற்கல்லவா இருக்கிறோம்.

இதற்காகவே நான் கண்டு அனுபவித்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமதி டி.ஆர். ராஜகுமாரி அம்மையார் அவர்களின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்ற நாள். திரு.சி.எஸ் ஜெயராமன் அவர்கள் பாடிக்கொண்டு இருந்தார். மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தார்கள்.

கார்த்திகை விளக்கு வைப்பது போல் சுற்றிலும் மின்சார விளக்குகள் போடப்பட்டு இருந்தன. மூலை முடுக்கில் உள்ள முகங்களும் நன்கு தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தன. மேடைக்கருகில் நானும் உட்கார்ந்திருந்தேன் மக்களோடு கலந்து... என்னை மற்றவர்கள் கவனிக்கும் அளவிற்கு விளம்பரம் பெற்றவன் அல்ல. ஆனால், மற்றவர்களின் செயலை, ஆற்றலைக் கவனித்துச் சிந்திக்கும் மனப்பாங்கு பெற்றிருந்தேன்.

சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் நன்றாகப் பாடிக்கொண்டிருந்தார். மக்களும் வெகுவாக ரசித்து அவ்வப்போது கைதட்டி மகிழ்ச்சியை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென கூட்டத்தினிடையே சலசலப்பு ஏற்பட்டது. என்ன குழப்பம் என்று எல்லோரும் பயத்துடன் பார்த்தோம். சில விநாடிகள் என்றுதான் கூற முடியும். கைதட்டல்கள் ஒலித்தன. ஆமாம். பாகவதர் அவர்கள் கூட்டத்தில் ஒருபுறத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அவரைச் சுற்றி ஒளி வீசிக்கொண்டிருந்ததாக உணர்ந்தேன். மேடை அருகில் அவருக்கென நாற்காலி போடப்பட்டு இருந்தது. சி.எஸ்.ஜெ. அவர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தார். அதுவரை மக்கள் ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், பாகவதர் அவர்கள் எங்கெங்கு தலை ஆட்டினார்களோ, ரசித்தார்களோ அங்கங்கே மக்களும் தலை ஆட்டினார்கள், ரசித்தார்கள். சொல்லப்போனால் “பாகவதர் அவர்களே தலை ஆட்டுகிறார், ரசிக்கிறார், ஆமோதிக்கிறார்... நாமும் ரசிக்கத்தான் வேண்டும்” என்பது போல மக்கள் அதிகமாக ரசித்தார்கள்.

நான் அப்போது என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதுகிறேன். அந்த இடத்தில் எத்தனையோ விளக்குகள் போடப்பட்டு இருந்தாலும் பாகவதர் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றதும் ஏதோ ஓர் இருள் கப்பிக் கொண்டதுபோலத் தோன்றியது. எனக்கு மட்டும் அல்ல; அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் தோன்றியது. பொன் நிறமான மேனி, பொன் நிறமுள்ள சட்டை, கழுத்தைச் சுற்றி சரிகை மட்டும் தெரியும் மேல் வேஷ்டி, காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள், நெற்றியில் சவ்வாது பொட்டு, தலையில் அழகான இருண்ட முடி- இவை அத்தனையும் தங்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு உருவத்தில் வைரங்கள் பதிந்தது போல காட்சி அளித்ததோடு சிரித்தபடி அவர் நடந்து வருவதைக் காணும் யாரும் தங்கத்தாலான உருவம் உயிர் பெற்று வருவது போலவே எண்ணுவார்கள்.

(D.V. பாலகிருஷ்ணன் எழுதிய ‘எம்.கே.டி. பாகவதர்: இசையும் வாழ்க்கையும்’ என்னும் நூலில் இக்கட்டுரையின் முழுமையான வடிவத்தைக் காணலாம். இந்த நூல் நாளை (மார்ச் 2) சென்னையில் வெளியிடப்படுகிறது.)

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 1 மா 2019