மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 23 ஜன 2020

பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்!

பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்!

மதரா

சென்னை கவின் கலைக் கல்லூரியின் ஓவியத்துறை மாணவ, மாணவிகள் 10 பேர் இணைந்து லலித் கலா அகாடமியில் கடந்த வாரம் ‘அன் ஸ்போக்கன்’ (Un spoken) என்ற தலைப்பில் தங்களது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.

சமூக நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக, உள் மனப் போராட்டங்களாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேல் வைக்கப்படும் கேள்விகளாக, உழைக்கும் மக்களின் மேல் உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவர்களது படைப்புகள் அமைந்திருந்தன.

தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் நூற்றாண்டு கடந்தும் அங்கே அதே நிலையிலே உள்ளனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படும் அவர்களது வாழ்க்கை சூழ்நிலையை படைப்பாக்கியுள்ளார் அருள்ராஜ். அவரது குடும்பம் உட்பட ஏராளமானோர் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தியாகாமல் உள்ளனர். அந்த வலியைத் தனது படைப்பின் வழி காட்சிப்படுத்தியுள்ளார்.

ராஜேஷின் படைப்புகள் அத்தனையும் மனிதர்களின் நிறம் மாறும் குணத்தையே கருவாகக் கொண்டுள்ளன. எனவே பச்சோந்தியைத் தனது ஓவியங்களில் குறியீடாகக் கையாண்டுள்ளார். ஒவ்வொரு ஓவியமும் 6 X 3 எனப் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எனது எண்ணங்களைக் கடத்த இந்த அளவும் போதாது என்றே நினைக்கிறேன் என்று கூறுகிறார் ராஜேஷ்.

கைத்தறிப் பட்டு நெசவில் ஈடுபட்டுள்ள காஞ்சிபுரம் நெசவாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது வரலாறு, அவர்கள் கைவண்ணத்தில் ஒரு பட்டுச் சேலை உருவாவதற்குப் பின்னுள்ள செயல்முறைகள், உழைப்பு ஆகியவற்றை அறிந்து வந்துள்ளார் சந்தியா. வண்ணமயமான நூல்களின் பின்னால் மறைக்கப்படும் நெசவாளர்களின் உழைப்பை இவர் தன் ஓவியங்கள் வழி வெளிக்கொண்டுவந்துள்ளார்.

நாம் பார்க்கும் பொருள்களுக்கு உருவம் இருக்கிறது. உள்ளுக்குள் கொப்பளிக்கும் கோபம், மகிழ்ச்சி, வேட்கை ஆகிய உணர்வுகளுக்கு உருவம் இருக்கிறதா? இந்த உணர்வுகளுக்குத் தன் தூரிகை மூலம் உருவம் கொடுத்துள்ளார் மது வந்தன். “எனக்குள் எழும் உணர்ச்சிகளை நான் படைப்பாக மாற்றிவிடுகிறேன். அதன் மூலம் என் மனம் அமைதியடைகிறது. என் மன அழுத்தத்தை போக்கும் கருவியாகவும் ஓவியத்தை நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் மதுவந்தன்.

இலவசத் திட்டங்கள் நாட்டைச் சீரழிக்கின்றன என்று சமீபத்தில் ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன. வீர வசந்த் இலவசத் திட்டங்களினால் விளைந்த நன்மைகளை தனது ஓவியங்கள் மூலம் வெளிக் கொண்டுவந்திருந்தார். “சிறு வயதில் டிவி பார்க்க ஒவ்வொரு வீடாக அலைந்துளேன். தோசைக்கு மாவு அரைப்பதற்காக கிரைண்டர் இருக்கும் பல வீடுகளில் நின்றிருக்கிறேன். அங்கு என் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அந்தத் தாழ்வு மனப்பான்மையை போக்கி என் சுயமரியாதையை மீட்டுத்தந்தது இந்த இலவச திட்டங்கள் தான்” என்று கூறினார் வீர வசந்த். உலகம் இயங்க அடிப்படைக் காரணமாக இருக்கும் விவசாயிகளின் உழைப்பைக் கண்டுகொள்ள மறுக்கும் சமூகத்தை வசந்த் தன் படைப்பின் வழி கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

நிரஞ்சனின் படைப்புகள் அனைத்தும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மேல் உள்ள விமர்சனமாகவே அமைந்துள்ளன. இனி வரும் காலங்களில் பிரத்யேகமாக ஒவ்வொருவருக்கும் தங்கள் பெயர் பொறித்த மருந்துகளே உணவுக்குப் பதிலாக விற்கப்படும் என்பதாகத் தனது படைப்பை உருவாக்கியுள்ளார். இயற்கையை ரசிக்க நம் மனம் ஆர்வம் கொண்டாலும் நாம் வாழும் நகரம் இயற்கைக்குப் புறம்பான அத்தனை வளர்ச்சிகளையும் உள்ளடக்கியே இருக்கிறது. மனித மனம் அதையே எதிர்பார்ப்பதாக நிரஞ்சன் தன் ஓவியத்தில் ரயில் பயணக் காட்சி மூலம் விவரித்துள்ளார். “ஜன்னலோரம் ரசிக்கும்போது பசுமையை எதிர்பார்க்கிறோம். கதவைத் திறந்து இறங்கும் நம் இடம் இயற்கைக்கு புறம்பான வளர்ச்சிகளைக் கொண்டதாக இருக்க விரும்புகிறோம்” என்று தனது ஓவியம் குறித்து விளக்குகிறார் நிரஞ்சன்.

ஜான்சி ராணி தனது உள் மன எண்ணங்கள், பார்வைகள், அபிப்ராயங்களை ஓவியத்தில் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார். மேலும் புகைப்படக் கலை, ஓவியம் இரண்டிலும் இயங்கிவரும் ஜான்சி இரு கலைகளின் நுட்பங்களும் மற்றொன்றுக்கு உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரியா தனது ஓவியங்களில் இயற்கையையும் பெண்ணையும் ஒப்பிடுகிறார். இரு தரப்பும் பரஸ்பரம் தங்களது இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதாகக் கூறுகிறார்.

மருத்துவ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பின்னர் சுகப் பிரசவத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக கூறுகிறார் திலீப். குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருப்பதை தண்ணீர் குடம் என்று அழைப்போம். அதனால் திலீப் தனது ஓவியத்தில் கருவறையை குடமாக பாவித்துள்ளார். அதன் வாயிலை நவீன மருத்துவம் அடைத்துள்ளதாக தனது ஓவியத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். பெண்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் போடப்பட்டிருக்கும் தையல் மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதை மற்றொரு ஓவியத்தில் பிரதிபலித்துள்ளார்.

சந்திரலால் காக்கைகளின் மேல் காதல் கொண்டவர். காக்கைகளின் வகைகள், அவற்றின் வெவ்வேறு உடல் மொழிகள், குண நலன்களை தனது ஒவ்வொரு ஓவியத்திலும் கொண்டு வந்துள்ளார். இயற்கையை உற்று நோக்கும் சந்திர லால் மனிதன் இயற்கையின் அங்கம் என்றும் விதை மரமாக உருவம் கொள்வது போல் கலையும் வளர்ச்சி கொள்வதாகக் கூறுகிறார்.

வியாழன், 28 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon