மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்!

நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்!

ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம்

செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்?

நான் பணிபுரிந்த செய்தி வலைதளம் ஒன்றில், ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியால் மாணவர் சேர்க்கை வெகுவாக கூட்டப்பட்ட அரசுப் பள்ளி ஒன்று குறித்த செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டது. ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான ஷேர்களையும் பெற்றது அந்தக் கட்டுரை. ‘அன்றைய நாளில் அந்தச் செய்திதான் நம் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட பக்கமாக இருக்கும்’ என்று நினைத்தேன். மறுநாள் காலை அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 10 செய்திகளின் ‘வியூஸ்’ எண்ணிக்கையைப் பார்த்தபோது, முதல் இடத்தில் நடிகர் அஜித் குறித்த செய்தியும், இரண்டாவது இடத்தில் கிரிக்கெட்டர் தோனி பற்றிய செய்தியும் இடம்பெற்றிருந்தது. முதல் 10 இடங்களிலாவது அந்தப் பள்ளிச் செய்தி இருக்கும் என்று பார்த்தால், அதுவும் இல்லை.

சரி, அந்தக் குறிப்பிட்ட செய்திக்கு எத்தனை பேஜ் வியூஸ்தான் கிடைத்திருக்கிறது என்று தேடிப் பார்த்தால், அந்த எண்ணிக்கையைப் பார்த்து தலைசுற்றிவிட்டது. வெறும் இரட்டை இலக்க பேஜ் வியூஸ் எண்ணிக்கை. உடனடியாக, தேடிச் சென்று ஃபேஸ்புக்கில் அந்தச் செய்தியின் நிலவரத்தைத் தேடிக் கண்டேன். லைக்ஸ் - 11K, ஷேர்ஸ் - 3.5K, கமெண்ட்ஸ் - 50.

படிக்காமலே லைக், படிக்காமலே ஷேர்!

அப்போதுதான் தெரிந்தது, நம்மில் பலரும் கண்ணில் படுகின்ற பாசிட்டிவ் செய்திகளை வாசிக்கிறோமோ, இல்லையோ, அவற்றை முன்யோசனையின்றிப் பகிர்ந்து நேர்மறை எண்ணங்களைப் பரப்புவதை முழுமுதற் கடமையாகக் கொண்டிருக்கிறோம். நம் டைம்லைனை உன்னதமாகப் போற்றிக் காக்கிறோம். அதுபோன்ற பகிர்வுக்கு அன்பு விருப்பங்களை அள்ளித் தெளிக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் மக்களால் அதிகம் ஈர்க்கப்படும் விஷயங்களில் ஒன்று: அரசுப்பள்ளி, அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த பதிவுகள். அரசுப்பள்ளி மாணவர்கள் குறித்த வேதனைகள் தொடங்கி சாதனைகள் வரை எல்லாவிதமான செய்திகளும் பதிவுகளும் வேறெந்த நெகிழ்ச்சியான விஷயங்களைக் காட்டிலும் அதிக கவனம் பெறுவதைக் காண முடிகிறது. இது, நம் மக்களுக்கு அரசுப்பள்ளி - அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான உளபூர்வ ஈடுபாட்டையும் அக்கறையையுமே காட்டுகிறது.

இந்த இடத்தில்தான் ‘ஆக்டிவ்’ ஆன ஆசிரியர்கள் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. பொதுவாக, நாம் எந்தத் துறையில் செயலாற்றினாலும், நம் திறன்களை உலகுக்குக் காட்ட மிக எளிதாகக் களம் அமைத்துக் கொடுக்கும் இடமாகவும் சமூக வலைதளம் உள்ளது. அது மட்டுமின்றி, நம் புதுமுயற்சிகளையும் வெற்றிகளையும் வெளிப்படுத்துவதன் மூலம் அதே துறையில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றவும் வழிவகுக்கிறோம். இதை மிகச் சிறப்பாக செய்து வருகிறது ஆசிரியர் சமூகம். குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்.

தங்கள் வகுப்பறையில் பின்பற்றும் புதுவிதமான கற்பித்த முறைகள், கல்வி சார்ந்த முன்முயற்சிகள், மாணவர்களின் திறமைகளைப் பறைசாற்றும் ஆக்கங்கள், தங்கள் முயற்சிகளால் கிடைத்த பலன்கள் முதலானவற்றை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதைப் பார்க்கிறேன். மாணவர்கள் மீதான அக்கறையையும், கல்வித் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் அவர்களின் முன்னெடுப்புகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. அரசுப்பள்ளிகள் மீதான தவறான பிம்பங்களை உடைக்கும் அம்சமாகவும் இதைப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மற்ற ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வழிகாட்டுதலாகவும் முன்னுதாரணமாகவும் இந்த அணுகுமுறை இருப்பது தெளிவு.

இதுபோன்ற ஆர்வமும் அக்கறையும் மிகுந்த ஆசிரியர்களைச் செய்தி ஊடகங்கள் அடையாளப்படுத்துவதும், பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி அங்கீகரித்துக் கவுரவிப்பதும் நடப்பது மற்றொரு நேர்மைறை விஷயம். ஆனால், அவ்வாறாக அடையாளப்படுத்தும்போது வெறும் சமூக வலைதள போஸ்டுகளையும், அவற்றுக்குக் கிடைக்கின்ற வரவேற்புகளை மட்டுமே பார்த்துத் தெரிவு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.

ஏனெனில், சமூக வலைதளம் என்பது நிஜங்களும் போலிகளும் சரிவிகிதத்தில் கலந்து கிடக்கும் பேரிடம் என்பதை மறந்துவிடக் கூடாது. நம்பகத்தன்மை கொண்ட பல ஆசிரியர்களுக்கு மத்தியில், தங்கள் புகழுக்கான அடித்தளமாகவே சமூக வலைதளத்தை சில ஆசிரியர்கள் பயன்படுத்திவருவதையும் கவனிக்க முடிகிறது. அரசுப்பள்ளியையும், அரசுப்பள்ளி மாணவர்களையும் லைக்குகளை அள்ளுவதற்கான மூலதனமாகக் கொண்டு மட்டுமே சிலர் இயங்குகின்றன. கற்றல், கற்பித்தல், செயல்வழிக் கற்றல், முன்முயற்சிகள் போன்ற எதுவுமே அவர்களிடம் ஆழமாக இருக்காது. ஆனால், எந்த மாதிரி நெகிழ்ச்சி வார்த்தைகளைக் கொட்டினால், எந்த மாதிரியான புகைப்படங்களைப் பகிர்ந்தால் கவனம் ஈர்க்கப்படும் என்ற சமூக ஊடக உளவியலில் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்வர்.

போலிகள் ஜாக்கிரதை!

செய்தி ஊடகங்களில் ‘டெஸ்க் வொர்க்’கில் சிறந்து விளங்கும் செய்தியாளர்கள் தங்கள் ஃபேஸ்புக் ஃபீல்டுக்கு வருகின்ற இதுபோன்ற போலியானவர்களை எளிதில் அடையாளப்படுத்தி விடுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளின் உண்மைத் தன்மையின் அளவைச் சரியாகக் கண்டறிந்து, தங்கள் செய்திக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுவதில் கோட்டைவிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தமில்லாத சம்பந்தப்பட்டவர்களுக்கு விருதுகளும் அங்கீகாரமும் குவிவதும் கண்கூடு. உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் சிறப்பாக கல்விப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை புகழும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

இதற்கு, ஒருவர் மீதான நம்பகத்தன்மையைச் சரிபார்த்தல் என்பது தீர்வாக இருக்கும். அதேவேளையில், தங்கள் வகுப்பறையில் புத்தாக்க முயற்சிகளுடன் கல்விப் புரட்சி நிகழ்த்திவரும் ஆசிரியர்கள் பலரும், அவை குறித்து தங்களது பக்கத்து வகுப்பறையின் ஆசிரியருக்குக்கூடத் தெரியாமல் கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்கள் தங்கள் தயக்கங்களைக் கழற்றி வைக்க வேண்டும். அவர்களுக்கான இடமாகவும் சமூக வலைதளங்கள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேர்மையாக இயங்கக்கூடிய ஆசிரியர்களைப் பின்பற்றி அவர்களும் இங்கே தீவிரம் காட்டத் தொடங்க வேண்டும். நிஜங்களின் எண்ணிக்கை கூடும்போது போலிகள் பொலிவிழந்துபோகும். அப்படி அவர்கள் தயக்கம் காட்டும்போது, அவர்களுக்குரிய இடத்தை தவறான ஒருவர் நிரப்பிவிடுவார் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் பள்ளி ஆசிரியர்களில் நிஜ முகங்களைச் சமீபத்தில் ஒரு கல்விப் பிரச்சினை மூலம் கண்டுகொள்ள முடிந்தது. 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த முனைந்த தமிழக அரசுக்கு எதிராக, கச்சிதமான காரணங்களுடன் அழுத்தமாகக் குரல் கொடுத்த ஆசிரியர்களுக்கும், இந்தப் பிரச்சினை பற்றி பெரிதாகப் பேசாமல் அன்றாட போஸ்டுகளில் மும்முரம் காட்டிய ஆசிரியர்களுக்கும் இடையிலான ‘இடைவெளி’யைக் காண முடிந்தது.

ஆசிரியர்களிடையே நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளி குறித்து யோசிக்கும்போது, ஒரு பள்ளியின் முதல்வர் என் நினைவுக்கு வருகிறார்.

எழுத்து, கலைகளில் ஈடுபாடு உள்ளவர். கல்வி சார்ந்த பிரச்சினைகள் என்றால் அவரது மேற்கோளுக்கும் கருத்துக்கும் நிச்சயம் முதன்மை இடம் உண்டு. அந்தப் பள்ளி முதல்வர் மீது எனக்குப் பெருமதிப்பு இருந்தது. ஒருநாள் அவரது பள்ளிக்குச் செல்ல நேர்ந்தது. அவரது அறையில் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அவரது அறைக்கு ஏதோ தகவல் சொல்ல ஒரு மாணவர் வந்தார். முதல்வரின் மென்மையான குரல் டீஃபால்டாகக் கரடு முரடு ஆனதைக் கவனிக்க முடிந்தது. அந்த மாணவர் தன் கைகளைக் கட்டிக்கொண்டு பயத்துடனும் பதற்றத்துடனும் பேசினார். கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக உரத்த குரல் கொடுத்துவந்த அந்த முதல்வரின் எழுத்து - பேச்சுகளில் மலிந்துள்ள நடுக்கங்களைப் போல.

படங்கள்: ந.வசந்தகுமார்

(கட்டுரையாளர் சரா சுப்ரமணியம் பத்திரிகையாளர், சினிமா ஆர்வலர். இவரைத் தொடர்புகொள்ள: fb.com/saraa.subramaniam)

ரஜினி இல்ல மண விழா: நெருடல்களை விஞ்சிய நெகிழ்ச்சிகள்!

வியாழன், 28 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon