மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

வீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு!

வீடுகளுக்கான ஜிஎஸ்டி குறைப்பு!

வீடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் குழுவின் 33ஆவது கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்டுமானப் பணியில் இருக்கும் வீடுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல் 5 சதவிகிதமாகக் குறைப்பதாக மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார். இதற்கு முன்னர் இவ்வகை வீடுகளுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டு வந்தது. அதேபோல, மலிவு விலை வீடுகளுக்கான வரி 8 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில் ரூ.45 லட்சத்துக்குள் 60 சதுர அடி அளவில் கட்டப்படும் வீடுகளுக்கு இது பொருந்தும்.

வீடுகளுக்கான புதிய வரி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விகிதங்களின் கீழ் கட்டுமான நிறுவனங்கள் உள்ளீட்டு வரிக் கடன்களைப் பெற முடியாது. இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் கட்டுமானத் துறையின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து ஆலோசிக்க கவுன்சில் உறுப்பினர்களுக்குக் கால அவகாசம் தேவை என்பதால் அடுத்த கூட்டத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

திங்கள், 25 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon