மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 பிப் 2019

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வறட்சியும் வெள்ளமும்!

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வறட்சியும் வெள்ளமும்!

கதவைத் தட்டும் பேரழிவு: மனிதர்களால் தப்ப முடியுமா?

நரேஷ்

பேரழிவு குறித்த கதைகளைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தக் கதைகளில்கூடத் தற்போது நடந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு அழிவு குறிப்பிடப்பட்டிருக்காது.

“மிகப் பெரிய வறட்சி வந்துச்சு. சாப்பாடு தண்ணி இல்லாம விலங்குகளும் மனுஷங்களும் செத்துப்போனாங்க. அதுக்கப்பறம் கடுமையா மழை பெஞ்சு வெள்ளம் வந்துச்சு. வெள்ளத்துல மொத்த ஊரும் அழிஞ்சிருச்சு..” என்பதாக இருக்கும் அந்தக் கதைகள்.

வறட்சி வந்த பிறகு வெள்ளம் வரும் என்பதுதான் கதையில் காட்டப்பட்ட அதிகபட்சக் கருணை. இன்றைய நிலை அந்தக் கருணைக்குக்கூட இடமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆஸ்திரேலியா எனும் நிலத்தின் தென்பகுதியில் வறட்சியின் காரணமாக நீரின்றி உயிரினங்கள் வறண்டு இறந்தன. அந்த வறட்சிக்குப் பிறகல்ல, அந்த வறட்சியின்போதே ஆஸ்திரேலியாவின் மறுபக்கத்தில் வரலாறு காணாத வெள்ளம்! அதுவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பலிவாங்கிய வெள்ளம்! ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் அதிக வெப்பத்தால் உயிரினங்கள் இறந்துவரும் அதே வேளையில்தான் வடகிழக்கில் வந்திருக்கிறது வெள்ளம்!

“முதல்ல சுத்தி இருக்க உயிர்களெல்லாம் கூட்டம் கூட்டமா செத்துச்சு. அதுங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு கடவுள் மொதல்ல அவங்களை கூப்பிட்டுக்குவாரு. அப்புறம் மனுஷங்க பண்ண தப்புக்கெல்லாம் சேர்த்து வெச்சு கஷ்டப்பட்டு சாவாங்க. அதுதான் ஊழி...”

ஊழி தொடர்பான எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கின்றன. பல்வேறு வரலாற்று பதிவுகளிலும் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. 'Exodus: Gods and kings' என்ற வரலாற்றைத் தழுவிய திரைப்படத்தில்கூட இப்படியொரு காட்சி பதிவுசெய்யப்பட்டிருக்கும். குறிப்பிட்ட ஊரின் மக்கள் இறப்பதற்கு முன், அவர்களின் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டும் வறட்சியின் காரணமாகவும் இறந்துபோகும். பிறகு வெள்ளம் வந்து அழிக்கும். இருக்கும் கொஞ்சம் நன்னீரில் தவளைகள் இறந்து மிதக்கும். அவற்றின் அழுகிய உடல்களிலிருந்து நோய்த்தொற்று மனிதர்களைத் தாக்கும்.

இந்த வரலாற்றை ஆஸ்திரேலியா மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறது. வரலாறு தன்னை மீண்டும் நிகழ்த்திக்கொள்கிறது (History repeats itself) என்பார்களே, அதன் நிகழ் உதாரணங்கள் இவை.

இதில் வேடிக்கை என்னவென்றால், அழித்துக்கொண்டிருந்த வறட்சியைப் போக்கப் பெய்த மழை அல்ல இது. இந்த வெள்ளத்தால் அந்த வறட்சியை எந்த வகையிலும் தடுக்க முடியவில்லை. மாறாக, வறட்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு அழித்தது மழை வெள்ளம்.

100 ஆண்டுகள் இல்லாத அளவில் பெய்த மழை, குயின்ஸ்லாந்து முழுவதையும் நீரில் மிதக்கச் செய்தது. சராசரியாக டவுன்ஸ்வைல் நகரில் பதிவாகும் மழை அளவைவிட 20 மடங்கு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மின்சாரம் நின்றுபோனது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு சாதனங்கள் பயனற்றுப்போயின.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், தொழில்நுட்பம் பயனற்றுப்போனது. வெள்ளத்திற்குப் பிறகான கணக்கெடுப்புகளை நடத்த மட்டுமே தொழில்நுட்பம் பயன்பட்டது.

இன்னொரு முக்கியச் செய்தி. வழக்கம்போல இந்த வெள்ளத்திற்குத் தொழில்நுட்பமும் மிக முக்கியக் காரணம். பெருமழையின் காரணமாக நிரம்பிய அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதால்தான் கடுமையான வெள்ளம் வந்தது.

ஆஸ்திரேலியாவில் தற்போது பெய்த பெருமழையினால் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கணக்கெடுக்கப்படாமல் இறந்து கிடக்கும் உயிர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். கால்நடைகளை விடுத்து, உயிரிழந்த காட்டு விலங்குகளின் எண்ணிக்கையெல்லாம் இன்னும் கணக்கிடப்படவேயில்லை.

இந்த வெள்ளத்தில் மூழ்கி இறந்த கால்நடைகளின் அழுகிய உடல்களைக் காண கனத்த இதயம் வேண்டும். வறட்சியால் மெலிந்து இறந்த உயிரினங்களின் உடல்கள் ஒருபுறமும், வெள்ளத்தால் உயிரிழந்து உப்பிய உடல்கள் ஒருபுறமும் ஆஸ்திரேலியாவின் ஆன்மாவை அறுத்துப் போட்டிருக்கின்றன.

கதைகளில் வந்ததைப் போல, ஒன்றும் அறியா உயிரினங்கள் முதலில் இறந்து, இப்புவியில் நடக்கவிருக்கும் பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன.

மனிதர்கள் என்ன செய்யப்போகிறோம்?

ஆஸ்திரேலியா அதிர்ச்சி!

செவ்வாய், 19 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon