மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 பிப் 2019

1.25 லட்சம் பேருக்கு வேலை!

1.25 லட்சம் பேருக்கு வேலை!

ஜவகர்லால் நேரு துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தில் சுமார் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜேஎன்பிடி) சார்பாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பைக்கு அருகில் உரான் நகரத்தில் உள்ள ஜேஎன்பிடி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இலவச வர்த்தகக் கிடங்கு மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி பேசுகையில், “கொங்கன் பகுதியைச் சர்வதேச சுற்றுலாத் தலமாக ஜவகர்லால் நேரு துறைமுகம் மாற்றி வருகிறது. இங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளால் சுமார் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ரூ.16 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டத்தின் கீழ், ஜேஎன்பிடி செயல்படுத்தும் திட்டங்களுக்கு மட்டும் ரூ.2.35 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இத்தொகையைக் கொண்டு மொத்தம் 114 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளால் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் கொங்கன் பகுதி மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஜேஎன்பிடி துறைமுகத்தின் மேம்பாட்டுப் பணிகளால் தமது மாநிலத்துக்கு அதிகமான தொழில் வாய்ப்புகள் கிடைப்பதாகக் கூறினார்.

செவ்வாய், 19 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon