மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

தனித்துப் போட்டி: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

தனித்துப் போட்டி: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

சட்டமன்றத்தில் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்று வருகிறது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாரூர் இடைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த முறை மழைக் காலங்களில் தேர்தலை நடத்துவதில் ஏற்படும் பிரச்சினை குறித்துதான் தேர்தல் ஆணையத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதனை உண்மை என்று உணர்ந்துதான் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கவில்லை. தற்போது திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி அனைத்துக் கட்சிகளும் கடிதம் கொடுத்ததால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 18 சட்டமன்ற தொகுதிகளைப் பொறுத்தவரை வழக்கு இருந்துவருகிறது. தேர்தலை சந்திக்க முடியாது என்று நாங்கள் எப்போதும் தெரிவித்ததில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்தால் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கே.ஆர்.ராமசாமி, கூட்டணி இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலளித்துப் பேசினர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “1967ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் ஒருமுறையாவது தனித்துப் போட்டியிட்டது உண்டா? வெற்றிபெற்றது உண்டா? ஒன்று எங்களில் தோள்களில் ஏறிக்கொள்வீர்கள், இல்லையெனில் திமுக தோள்களில் ஏறிக்கொண்டு இறங்கமாட்டீர்கள். இதன் மூலமாகத்தான் நீங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஆகும் நிலைமை இருக்கிறது. தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித் தனியாக போட்டியிடட்டும், நாங்களும் தனித்துப் போட்டியிடத் தயார், தேர்தலில் சந்திப்போம்” என்று பதிலளித்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon