மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

ரஃபேல் விவகாரத்தில் யார் சொல்வது பொய்?

ரஃபேல் விவகாரத்தில் யார் சொல்வது பொய்?

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி, அருண் ஜேட்லி பொய் கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் பொய் சொல்வதாக அருண் ஜேட்லியும் கூறியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக பொய் கூறியவர்களை ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது என்று அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மத்திய தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அடுத்தடுத்து அவர் இட்ட சில பதிவுகளில், “சிஏஜி அறிக்கையின் மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகியுள்ளது. ரஃபேல் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாகப் பொய் கூறி வந்தவர்களை ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது?

2007ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி போட்ட ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் குறைந்த விலை, விரைவான விநியோகம் மற்றும் சிறந்த பராமரிப்பு சேவைகள் உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார். ஆனால் 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் எங்கும் விலை குறிப்பிடப்படவில்லை. பழைய ஒப்பந்தத்தையும், புதிய ஒப்பந்தத்தையும் ஆய்வு செய்து சிஏஜி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் பழைய ஒப்பந்தத்தை விட புதிய ஒப்பந்தத்தில் 2.86 விழுக்காடு விலை குறைவதாகவும், விரைவில் விமானங்களைப் பெற்றுக்கொள்ள இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சிஏஜி அறிக்கையை வைத்து மத்திய அரசை ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். ”இதுவரையில் 9 விழுக்காடு விலை குறையும் என்று கூறி வந்தார்கள். நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இதைப் பதிவு செய்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி ஆகியோர் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி இதுகுறித்து மேலும் பேசுகையில், “இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் அவசரமாகத் தேவைப்படுவதால்தான் புதிய ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நரேந்திர மோடி அரசு போட்டுள்ள ரஃபேல் ஒப்பந்தத்தில் கடைசி போர் விமானம் இந்திய பாதுகாப்புத் துறைகளின் கைகளுக்குக் கிடைக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.இந்த புதிய ஒப்பந்தத்தில், ரஃபேல் போர் விமானங்களுக்கான பென்ச்மார்க் விலை அசல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் 55.6 விழுக்காடு அதிகமாகும்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon