மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்திலும், ஐஜி மற்றும் பெண் எஸ்.பி சார்பாக தனித்தனியே வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை பிப்ரவரி 11ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி மீது புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகத் தடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீசில் மீண்டும் புகாரளிக்க அறிவுறுத்தினார்.

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பெண் எஸ்.பி, நேற்று (பிப்ரவரி 12) எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 13) மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ”ஐஜி முருகனுக்கு எதிராகக் காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதி, ”இது போன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை கருத்தில் கொள்ளாமல், துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.

ஐஜி முருகனுக்கு எதிராகப் பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon