மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 மா 2020

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ரத்து: கல்வித் துறை!

ஆசிரியர்கள் சஸ்பெண்ட் ரத்து: கல்வித் துறை!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் சார்பில் ஒன்பது நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்புமாறு ஜாக்டோ ஜியோவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் பள்ளித் தேர்வுகள் தொடங்க இருப்பதைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முன்னர் தெரிவித்திருந்தது. அதேபோன்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கமும் கலந்து கொண்டது. அதன்படி 25 கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத 2 பேர் என்று மொத்தம் 27 பேரை சஸ்பெண்ட் செய்து சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தது பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 13) தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பொன்றை வெளியிட்டது. அதில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று அந்த நடவடிக்கை ரத்து செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon