மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

சினிமாவை வீட்டு வாசலிலேயே விட்டுவிடுவேன்!

சினிமாவை வீட்டு வாசலிலேயே விட்டுவிடுவேன்!

சினிமா விஷயங்களை வீட்டு வாசலிலேயே விட்டுவிட்டுதான் வீட்டுக்குள் நுழைவேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சமந்தா தனது அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். தனது குடும்ப வாழ்க்கை பற்றியும், அடுத்த படம் பற்றியும் அவர் பேசுகையில், “தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என எனக்குத் தெரியும். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, குடும்ப வாழ்வுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் கவனித்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிக மிக கவனத்துடன் இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கத்தான் நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். நாம் வீட்டுக்குள் நுழைந்தால் மகிழ்ச்சியான சூழல் இருக்க வேண்டும்.

நானும் என் கணவர் நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். என் கணவரின் மொத்த குடும்பமுமே ஏதோ ஒரு வகையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் வீட்டில் சினிமா பற்றி பேச மாட்டோம். மாலை 6 மணி ஆகிவிட்டால் என்னைப் பற்றி என் கணவரும், அவரைப் பற்றி நானும் யோசிப்போம். எங்களது சொந்த வாழ்வைப் பற்றி மட்டுமே நாங்கள் சிந்திப்போம். சினிமா விவகாரங்களை வீட்டு வாசற்படிக்கு வெளியிலேயே விட்டுவிடுவோம். அதனால்தான் எங்களுக்குத் தேவையான நேரத்தை நாங்கள் ஒதுக்க முடிகிறது. இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் வந்து படத்தைப் பற்றி பேச மாட்டோம். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மட்டுமே படத்தைப் பற்றி பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon