மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

பிரதமருக்கு நன்றி சொன்ன தம்பிதுரை

பிரதமருக்கு நன்றி சொன்ன தம்பிதுரை

16ஆவது மக்களவை கூட்டத் தொடரின் கடைசி அலுவல் தினமான இன்று உரையாற்றிய துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விரைவில் மக்களவைத் தேர்தலை நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில், 16வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி அலுவல் தினம் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. பிற்பகலுக்குப் பிறகு ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். பிரதமர் உரையாற்றுவதற்கு முன்பாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். தனது பேச்சில் பிரதமருக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

தம்பிதுரை பேசுகையில், “இன்று 16ஆவது மக்களவையின் கடைசி நாள். துணை சபாநாயகராக என்னைத் தேர்வு செய்ததற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் இவர்கள் இருவரும்தான் என்னை இந்தப் பதவியில் அமரவைத்தனர். மேலும் என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சியினருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

1984ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தபோது, நான் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதுபோலவே 30 வருடங்கள் கழித்து 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்பட்டது, நான் துணை சபாநாயகரானேன். அடுத்த முறை இப்பதவிக்கு வருவேனா என்பது தெரியாது. நான் இந்த அவைக்கு வருவேனா என்பது குறித்து மக்கள்தான் முடிவு செய்வார்கள். எனக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பட்ஜெட் மீதான விவாதத்தில் தமிழகத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். ஏனெனில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றியாக வேண்டும். ஆகவேதான் என்னுடைய மாநிலத்தின் உணர்வுகளை இங்கு பிரதிபலித்தேன்” என்று விளக்கினார்.

மேலும், “பல்வேறு கலாச்சாரங்கள் நிலவினாலும், பல கட்சிகள் இருந்தாலும் இந்தியா என்பது ஒன்றுதான். இதுதான் இந்தியாவின் பெருமை. இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்துள்ளது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு கொண்டுவந்தது தமிழகம்தான், நேரு பிரதமராக இருந்தபோது அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்ட தம்பிதுரை,

அதனால்தான் மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் நாங்கள் குரல் கொடுக்கிறோம். பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார். மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை அவருக்கும் தெரியும். எனவே கூட்டாட்சித் தத்துவம் என்பது மிகவும் முக்கியமானது, அது தொடர வேண்டும்” என்று கூறித் தனது உரையை முடித்தார்.

16வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon