மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

சிறையில் உல்லாசம்: டிஜிபியிடம் காவலர்கள் புகார்!

சிறையில் உல்லாசம்: டிஜிபியிடம் காவலர்கள் புகார்!வெற்றிநடை போடும் தமிழகம்

சென்னை புழல் சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட சிறைத் துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, சிறைத் துறையைச் சேர்ந்த காவலர்கள் சிலர் காவல் துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு புழல் மத்தியச் சிறையில் உள்ள இரண்டாவது அலகில் தண்டனைக் கைதிகளுக்குப் பல்வேறு சொகுசு வசதிகள் செய்து தரப்படுவதாகப் புகார் எழுந்தது. இப்பிரிவில் கொடுமையான குற்றங்கள் தொடர்பாகக் கைதானவர்களும், அடிப்படைவாதம் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருக்கும் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, தேவையான உணவுப் பொருட்கள் உட்படப் பல்வேறு வசதிகள் கிடைப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் சோதனை மேற்கொண்டனர் காவல் துறை உயரதிகாரிகள்.

இந்த நிலையில், புழல் சிறையில் பணபலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் சிறைத் துறையிலுள்ள உயரதிகாரிகளே செயல்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர் சிறைத் துறையைச் சேர்ந்த 23 காவலர்கள். இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கும், சிறைத் துறை டிஜிபிக்கும் அவர்கள் தங்கள் கையெழுத்தையிட்டு 4 பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், சிறை அலுவலர், உதயகுமார், முதல்நிலை காவலர்கள் இசக்கிராஜா, ஆனந்தராஜ், மோகன், கண்ணன் ஆகியோர் மீது அக்கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று புழல் மத்தியச் சிறை 4, 5 பகுதிகளில் சட்டவிரோதமாகக் கைதிகளுக்குப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு அங்குள்ள சிறை ஊழியர்கள் உதவுவதாகவும், இதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் நேர்மையான காவலர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக இந்த புகார் கடிதம் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon