மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

பாஜக, பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம்

பாஜக, பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம்

பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்துவருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாகவும் அதே சமயத்தில் மிகவும் ரகசியமாகவும் நடைபெற்று வருகிறது. அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே பாஜக மற்றும் பாமக தலைவர்களின் கருத்துக்கள் இருந்துவருகிறது.

இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், “மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில் பாஜக, தேமுதிக, பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதை அதிமுக உறுதிசெய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ளவருமான வைத்திலிங்கத்திடம், பாஜக தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுக நடத்திவரும் பேச்சுவார்த்தை எந்தக் கட்டத்தில் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், “நீங்கள் சொன்ன கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடக்கிறதென ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக கூறிவிடுவோம். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், காலதாமதம் என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon