மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன்

திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன்

‘பேரன்பு’ திரைப்படத்தை முன்னிட்டு

விமர்சன வெளியில் ஒரு பயணம்

எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், திறனாய்வு என்றாலே ஏதோ நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப்பெற்றவர்களின் வேலையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படம் தொடர்பாகத் தேர்ந்த திரைப்பட விமர்சகர்களாக அறியப்பட்டவர்களும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அப்படியாக அறியப்படாத அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளும் விவாதிக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, இசைக் கோர்ப்பு, தொகுப்பு நேர்த்தி, காட்சியமைப்புகள், நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு, ஒவ்வொரு அத்தியாயமும் பனிமூட்டம் மூடியிருப்பது போலத் தொடங்கித் தெளிவடைகிற பின்புலம் ஆகியவை உள்ளிட்ட கலைக் கூறுகளை எல்லோருமே பாராட்டியிருக்கிறார்கள். சிலர் ஒளிப்பதிவு உள்ளிட்ட அந்தக் கலைக் கூறுகளை மட்டுமே பாராட்டியிருக்கிறார்கள். என் பார்வையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் கதையையும் தங்கள் பாத்திரங்களையும் உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இயக்குநர் ராம் அந்தக் குதிரைக்கும்கூடக் கதை சொல்லியிருப்பாரோ, குருவிக்கும்கூடக் காட்சி விளக்கம் அளித்திருப்பாரோ என்று தோன்றுகிறது!

இயற்கையின் இன்னொரு பாலினத்தவரான திருநங்கையர்கள் விரும்பக்கூடிய, ஒரு ஆணின் இணையராய் வாழ்கிற குடும்ப உறவுடன் படம் முடிகிறது. எனக்குத் தெரிந்து இவ்வாறான உறவை அழுத்தமாகவும் அழகாகவும் சித்தரித்த முதல் தமிழ் சினிமா இதுவாகத்தான் இருக்கக்கூடும். மற்ற நடிகர்கள் மாறுபாலினத்தவரைக் கேலி செய்யும் வகையிலோ, பாராட்டும் வகையிலோ திருநங்கையராக வேடமிட்டு நடித்ததுண்டு. இப்போது திருநங்கையராகத் திருநங்கையரே நடிக்கிற மாற்றம் வந்தது. இனி திருநங்கையரும் திருநம்பியரும் அந்த மற்ற பெண்களும் ஆண்களுமாக வேடமிட்டு நடிக்கிற காலம் வர வேண்டும்.

பேசப்படாத சிக்கலைப் பேசுகிற படம்

சிறப்புக் குழந்தைகள் என்று வகைப்படுத்தப்படுகிறவர்கள், மூளைத்திறனும் அதனோடு இணைந்த உடல் அங்கங்களின் செயல்பாடுகளும் முடங்கியவர்கள் பற்றி இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களைப் பெற்றவர்களும் மற்றவர்களும் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றிப் படம் என்ன பேசுகிறது என்று விவாதிக்கப்படுகிறது. அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று படம் உணர்த்துவது தொடர்பாகவும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

குறிப்பாக, இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உடல் சார்ந்து ஏற்படுகிற பருவ மாற்றங்கள் பற்றியோ, அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் மனச் சிக்கல்கள் பற்றியோ இதுவரையில் தமிழ் சினிமா பேசியதில்லை. அதை அங்கீகரித்துக்கொண்டே, ஆனால் சரியான கோணத்தில் அது பேசப்படவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

கால் நூற்றாண்டுக்கு முன்பாக நாங்கள் குடியிருந்த தெருவில் பக்கத்து வீட்டில் அப்படியொரு குழந்தை வளர்ந்தது. 14 வயதில் அந்தக் குழந்தை நடுத்தெருவில் ஆடையின்றி ஓடி நிற்கும். தெருவெல்லாம் அதிரும் அளவுக்கு அலறும். உரக்கச் சிரிக்கும். குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு, பணி ஓய்வுபெற்றுவிட்ட தாத்தாவுக்கு. இந்தப் பணியால்தான் அவருக்கு வீட்டில் மரியாதை கிடைக்கிறதோ என்று நான் நினைத்துக்கொள்வேன். அவர் அந்தக் குழந்தையின் பின்னாலேயே ஓடுவதும், கெஞ்சுவதும், வீட்டுக்கு இழுத்து வருவதும், உணவூட்டுவதும், உடை மாற்றுவதும் பலரது பரிவுக்கு உள்ளானது போலவே, சிலரது எரிச்சலுக்கும் உள்ளானதுண்டு.

“இந்த மாதிரிக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வெச்சிருக்க வேண்டியதுதானே…”, “இதுங்களுக்குன்னே இருக்கிற ஹோம்ல கொண்டுபோய் விட வேண்டியதுதானே….”, “இப்படித்தான் குழந்தை இருக்கப்போவுதுன்னு தெரிஞ்சப்பவே மூச்சை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே…” என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். “அந்தப் பெரியவருக்கு திடீர்னு ஏதாவது ஆயிடுச்சுன்னா பொண்ணோட கதி?...” என்ற கவலையையும் சிலர் பகிர்ந்துகொண்டதுண்டு. இது எனக்கு “துணை” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதக் கருவைக் கொடுத்தது.

பாசிட்டிவ் நெகட்டிவ்

“இப்படியான குழந்தைகளை வளர்ப்பது கடினம் என்ற நெகட்டிவ் சிந்தனையைத்தான் இந்தப் படம் ஏற்படுத்துகிறது,” என்கிறார் ஒரு தந்தை. இத்தகைய சவால்களுடன் பிறந்த தனது மகனை, ஊக்கமிழக்கச் செய்யும் வகையில் மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை மீறிப் படிக்கவைத்து முனைவர் பட்டமே பெறச் செய்திருக்கிறார். தந்தையும் மகனும் அளித்துள்ள காணொலிப் பேட்டியில், “இப்படிப்பட்ட பாசிட்டிவ் அப்ரோச்சைத்தான் ஒரு சினிமா போதிக்க வேண்டும்” என்கிறார்கள். வியந்து பாராட்டுவதற்கு மட்டுமல்லாமல் மகிழ்ந்து பின்பற்றுவதற்குமான முன்னுதாரணக் குடும்பமே இவர்களுடையது.

“எதையுமே பு/ரிந்துகொள்ள முடியாத என் முப்பது வயது மகளும் நானும் இன்னிக்கு வரையில் அனுபவிக்கிற பிரச்சினைகள் கொஞ்சநஞ்சமில்லை. படத்திலே காட்டியிருப்பது பிரச்சினைகளில் ஒரு சிறு அளவுதான்... இந்த அளவுக்காவது உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறதுதான் கரெக்ட். இப்படிக் காட்டினாத்தான் என் மகள் மாதிரி இருக்கிறவங்களை எப்படி ட்ரீட் பண்றதுங்கிறதை மக்கள் புரிஞ்சிக்கிடுவாங்க,” என்கிறார் ஒரு தாய்.

இது போன்ற படங்கள் ஒருவரது மனதில் ஏற்படுத்துகிற ஏற்பு, ஏற்பின்மை இரண்டிலும் அவரது சொந்த அனுபவம் சார்ந்த பாசிட்டிவ், நெகட்டிவ் கண்ணோட்டங்கள் பங்காற்றுவது புரிகிறது. மேலும், இத்தகைய சவால் மனிதர்களின் மூளைத்திறன் சார்ந்த புரிதல் மட்டம் ஒரே மாதிரியானதல்ல. முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கான புரிதல் நிலையோடும் இருக்கிறார்கள், மழலை மட்டத்திலான புரிதல் நிலையோடும் இருக்கிறார்கள். சராசரிக் குழந்தைகளோடு சிறப்புக் குழந்தைகளை ஒப்பிடுவது எவ்வளவு தவறோ, அதே அளவுக்குத் தவறானதுதான் இந்தக் குழந்தைகளுக்கிடையேயே ஒப்பிடுவதும்.

இந்தப் படத்தின் பாப்பா இருக்கிற மட்டம் நம்பிக்கை தருவதுதான். அவளால் குருவியின் விடுதலையை வலியுறுத்த முடிகிறது. கதை கேட்க முடிகிறது. அரை நிர்வாண பொம்மைக்கு வண்ணம் தீட்டி ஆடை அணிவிக்க முடிகிறது. தொலைக்காட்சியின் அல்லது சாலையோரச் சுவரொட்டியின் அல்லது அடுத்த வீட்டுக்காரர்களின் பாலியல் செயல்களில் மனக்கிளர்ச்சி கொள்ள முடிகிறது. பாப்பா போன்றவர்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பாதுகாப்பான, அரவணைப்பான, நம்பகமான சூழல் அமைவது முக்கியம். பாப்பா இப்படிப் பிறந்ததாலேயே பல ஆண்டுகள் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட தகப்பன் அமுதன் அவளை வந்தடைந்த பிறகு, அந்தக் கோபத்தாலேயே மனைவி ”ஓடிப்போய்விட்ட” நிலையில், இறுதியாக திருநங்கை மீரா தொடர்பு வாய்க்கிறது. அதன் பிறகுதான் அந்தப் பாதுகாப்பான, அரவணைப்பான, நம்பகமான சூழல் பாப்பாவுக்கு அமைகிறது.

அமுதன் இது பற்றியெல்லாம் படித்தறிந்தவனாகவோ, நிம்மதியான வாழ்க்கை அமைந்தவனாகவனாகவோ காட்டப்படவில்லை. சொல்லப் போனால், அவனை ஏமாற்ற வருகிற பெண், லாட்ஜில் வேலை செய்கிற சிறுவன் என்று ஆளுக்காள் சொல்கிற ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்கிறவனாகவே இருக்கிறான். அப்படிப்பட்டவன் பாப்பாவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுப் போகிறவனாகத்தான் இருப்பான். சரியான அணுகுமுறைக்கு வர அவனுக்கு ஒரு படநீளக் காலம் தேவைப்பட்டிருக்கிறது.

சிறப்புக் குழந்தைகளோடு பழகுவது பற்றி உரையாடுவதன் மூலம், சராசரிக் குழந்தைகளையே கூட நாம் ஒழுங்காகத்தான் கையாளுகிறோமா என்ற உறுத்தலைக்கூட இந்தப் படம் ஏற்படுத்துகிறது. அதைச் செய்யாதே, இதைப் பண்ணாதே, அவனோடு பேசாதே, இவளோடு பழகாதே என்று தொடங்கி சாதி அடையாளம், மத வன்மம், கடவுள் பயம், செயற்கைப் பணிவு என்று எத்தனை ஒடுக்குமுறைகளைக் காலங்காலமாகக் குழந்தைகள் மீது செலுத்தி வந்திருக்கிறோம்!

கலை இலக்கிய அரசமைப்பு சாசனம்?

இந்த மாதிரியான பிரச்சினையைப் படமாக எடுத்தால், அல்லது கதையாக எழுதினால் இப்படியான காட்சிகள்தான் அமைக்கப்பட வேண்டும், இப்படியான முடிவுதான் வைக்கப்பட வேண்டும் என்று சுற்றிவளைத்துக் கட்டளையிடுகிறவர்களாகத் திறனாய்வாளர்கள் மாறிவிடுகிறார்கள். அரசமைப்பு சாசனம் போல அவர்களாகக் கலை இலக்கிய சாசனம் ஒன்றை வைத்துக்கொண்டு அந்தக் கட்டளைகளுக்குள் வராத ஆக்கங்களைக் காட்சிக் குப்பை என்றோ, வார்த்தைக் குவியல் என்றோ, ஆவணத் தொகுப்பு என்றோ முத்திரையிடுகிறார்கள்.

இந்தப் பூமியில் 720 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் 720 கோடிக் கதைகளும் இருக்கின்றன, அரசியல் நிலைமைகள், சமூக விதிகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற சில பொதுவான தன்மைகள் தவிர்த்து, ஒவ்வொருவரின் கதையும் இன்னொருவர் கதையிலிருந்து மாறுபடுகிறது. அவ்வாறிருக்க ஒரு கதை இப்படியிப்படித்தான் இருக்க வேண்டும், கதாபாத்திரங்கள் இப்படியிப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று வரையறுப்பது இயற்கைக்குப் புறம்பானது மட்டுமல்ல, கலை இலக்கியச் சுதந்திரத்திற்கும் பொருந்தாதது.

ஒரு படைப்பு கூறும் பொதுச் செய்தியை வரவேற்கலாம், எதிர்க்கலாம். அதன் மையக் கருத்து சமுதாய நலனுக்குத் துணை செய்கிறதா, கேடு செய்கிறதா என்று அவரவர் கொள்கை நிலையிலிருந்து கருத்துரைக்கலாம். அதன் உள்ளடக்கம் முற்போக்கான மாற்றங்களுக்குத் தோள்கொடுக்கிறதா பின்னால் இழுக்கிறதா என்றும் விவாதிக்கலாம். அப்படிப்பட்ட கருத்துரைத்தலும் விவாதித்தலும் வெறும் கலை-இலக்கிய ரசனை விவகாரம் அல்ல, அது சமுதாய அக்கறை சார்ந்த கடமையும்கூட.

விமர்சகக் கிரீடம் விழாது

ஆனால், கதையே இப்படி இருக்கக் கூடாது, கதை மாந்தர் அப்படி முடிவெடுத்திருக்கக் கூடாது, அவ்வாறு பேசியிருக்கக் கூடாது, இவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று வரம்பு கட்டுவது அறிவுத் தள வன்மமாகவே எனக்குப் படுகிறது. இந்தப் படத்தைப் பற்றிய விவாதத்தில்கூட ஒரு தகப்பன் இப்படிச் செய்வானா என்று கேட்கிறார்கள். இப்படிச் செய்த ஒரு தகப்பனின் கதை இது என்று எடுத்துக்கொண்டால் குழப்பமே இல்லை. அதிரடிச் சண்டை நாயகர்கள் தோன்றுகிற “மசாலா” படங்களையேகூட, ஒரே ஆளால் இத்தனை பேரை அடித்து வீழ்த்த முடியுமா என்று கேட்டுச் சலித்துக்கொள்வதில்லை நான். இத்தனை பேரை அடித்து வீழ்த்திய ஒரு ஆளின் கதை இது என்று எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டதால் என் விமர்சகக் கிரீடம் கொஞ்சமும் சரிந்துவிடவில்லை.

கலை இலக்கிய வெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் இப்படியான சில புரிதல் எல்லைகளை அடைவதன் ஆகப் பெரிய பலன் ஒன்று இருக்கிறது. உங்களால் ஒரு கனமான படைப்பாக்கத்திற்கு உள்ளேயும் சென்று வர முடியும். கலகலப்பான வெளிப்பாடுகளுக்குப் பக்கத்திலும் நின்று வர முடியும்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon