மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

வல்லுறவில் பாதிக்கப்பட்ட உணர்வு: சபாநாயகர்!

வல்லுறவில் பாதிக்கப்பட்ட உணர்வு: சபாநாயகர்!

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர் எடியூரப்பா மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏவின் உறவினரிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் தனது பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டதை நினைத்து வல்லுறவில் பாதிக்கப்பட்டவராகத் தான் உணர்வதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி 117 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுயேச்சைகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், 4 அதிருப்தி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கிய நிலையில், கூட்டணியில் உள்ள மேலும் சில எம்எல்ஏக்களை தம் வசம் இழுக்க பாஜக முயற்சிப்பதாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியபோது, தமது கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ நாகன கவுடாவின் மகனிடம் பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டார் முதல்வர் குமாரசாமி. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தங்களுக்கு உதவி செய்வார் என்றும், அவருக்கு 50 கோடி ரூபாய் கொடுத்துவிடலாம் என்றும் எடியூரப்பா உறுதியளித்ததாகக் குற்றம் சாட்டியது நாகனகவுடா தரப்பு.

இது குறித்த விவாதம் நேற்று (பிப்ரவரி 12) கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்றது. பண பேரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்ட சபாநாயகர் ரமேஷ்குமார், இதில் தன்னைத் தொடர்புபடுத்தியதை நினைத்து வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் தனது பெயரைக் குறிப்பிட்டு தொடர்ச்சியாகக் கேள்விகள் எழும்போதெல்லாம், வல்லுறவில் பாதிப்புக்குள்ளானவர் போலவே தான் உணர்கிறேன் என்று குறிப்பிட்டார். தன் பெயர் குறிப்பிட்டதையடுத்து, இது தொடர்பாகச் சிறப்புக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். தனது பெயர் தேவையில்லாமல் களங்கப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon