மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தனி நீதிபதி உத்தரவு ரத்து!

தனி நீதிபதி உத்தரவு ரத்து!

தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

2017 ஜூலை 26ஆம் தேதியன்று 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அக்டோபர் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் அறிவிப்பாணையில் முறையான கல்வித் தகுதி அறிவிக்கப்படவில்லை. அதன் அடிப்படையில், வெளியிடப்பட்டவர்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், தொடக்கப் பள்ளி, மேனிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்குத் தனித்தனி கல்வித் தகுதி அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றும், அதனால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும், தேர்வு செய்யப்பட்டோருக்கு நான்கு வாரங்களில் பணி நியமன ஆணை வழங்கவும் உத்தரவிட்டனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon