மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி தர்ணா!

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி தர்ணா!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (பிப்ரவரி 13) தர்ணாவில் ஈடுபட்டார்.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கிரண்பேடி அறிவுறுத்தலின் பேரில், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, காவல்துறை மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது நேற்று (பிப்ரவரி 12) காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்தும் சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கு ஆளுநர் மாளிகை எதிரில் அமர்ந்து கிரண்பேடிக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக, காங்கிரஸ் கட்சியினரும் முதல்வருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கிரண்பேடியை புதுச்சேரியை விட்டு வெளியேறவும் கோஷமிட்டனர். முதல்வரின் போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதை முதல்வர் நிராகரித்ததாகவும் தெரிகிறது.

போராட்டத்தின் போது பேசிய முதல்வர், “தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் கோப்புகளை தடுத்து நிறுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஹெல்மெட் கட்டாயம் என்பதை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், சாலையில் செல்லும் பொது மக்களின் கையை பிடித்து இழுப்பது, வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களில் கிரண்பேடி ஈடுபடுகிறார். துணை நிலை ஆளுநர் போன்று இல்லாமல், கான்ஸ்டபிள் போல் செயல்பட்டு தனது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவாக நடந்து கொள்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon