மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

பிளாஸ்டிக் தடை: அபராதம் விதிப்பது தவறல்ல!

பிளாஸ்டிக் தடை: அபராதம் விதிப்பது தவறல்ல!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசின் சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற விவாதத்தில், பிளாஸ்டிக் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்களின் வணிக உரிமை ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 ரூபாயும், இரண்டாவது முறை பயன்படுத்தினால் 50,000 ரூபாயும், மூன்றாவது முறை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். மூன்று முறைக்கு மேல் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்னம்பலம் சார்பாக ஜெயின் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியை ஷிபா அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம். பிளாஸ்டிக் பொருட்கள் மட்காத தன்மை கொண்டதால் பெரும்பாலான மக்கள் அதை எரிக்கத்தான் செய்வார்கள் என்றும், பிளாஸ்டிக்கை எரிப்பதாலும், புதைப்பதாலும் மாசு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார். “நமக்காக மட்டுமில்லாமல், நம்முடைய தலைமுறையினரின் நலனுக்காகவும் பிளாஸ்டிக்கை தடை செய்கிறது அரசு. பொதுவாக இது போன்ற தடைகளைப் பின்பற்ற மக்களுக்கு அறிவுரை கூறினாலும், அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள். இது போன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றால், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

முதலில் பணம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மக்கள் தயங்குவார்கள் என்றும், நாளடைவில் பிளாஸ்டிக் தடையின் பயன் தெரியவரும் என்றும் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார். “அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. சுற்றுப்புறத்துக்கும், மனிதர்களுக்கும் மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். மக்களை அல்லது சமூகத்தைச் சீர்திருத்துவதற்கு அபராதம் விதிப்பது தவறானது அல்ல” என்று கூறினார் ஷிபா.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon