மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

விக்ரம்-பாலா: பிரிவு ஏன்?

விக்ரம்-பாலா: பிரிவு ஏன்?

இராமானுஜம்

சேது படம் மூலம் நடிகர் விக்ரமுக்கு திரையுலகில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் பாலா. தன்னைப் போலவே தன் மகனுக்கும் வெற்றிப் படத்தை பாலா தருவார் என்ற சென்டிமெண்டில் விக்ரம் வற்புறுத்தியதால் ரீமேக் படத்தை இயக்க பாலா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டு வேலைகள் நடந்தன. கடந்த மாதம் 9-ம்தேதி ‘வர்மா’ டிரெய்லர் ரிலீஸானது. துருவின் நடிப்பில் படத்தைப் பார்க்க எதிர்பார்த்திருந்த நிலையில், அது கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

பிதாமகன் படத்தின் மூலம் விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற காரணமாக இருந்தவர் இயக்குநர் பாலா. தான் இயக்கும் படம் வணிக ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் சமரசம் இன்றி படப்பிடிப்பை நடத்தக் கூடியவர் இயக்குநர் பாலா. அப்படிப்பட்டவர் ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொண்டதே விக்ரமிடம் இருந்த நட்புதான். அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் வணிக ரீதியாக வெற்றிப்படம் என்றாலும், படைப்பு ரீதியாகக் கடும் விமர்சனங்களை சந்தித்த திரைப்படம். ‘அச்சச்சோ’ என்ற வார்த்தையை அவ்வப்போது சொல்லவைக்கும் இப்படத்தின் ரீமேக்கை இயக்க பாலா எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்விகள் அப்போது பாலாவின் படைப்புகளை நேசித்தவர்களால் கேட்கப்பட்டது.

பாலாவின் படங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு வறுமை இருக்காது. ஆபாச காட்சிகள் துளியும் இருக்காது. தனித்துவம் மிக்க இயக்குனரான பாலா இயக்கத்தில், அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மாவாக எப்படி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டத்தில் பேசும்போது, படப்பிடிப்பு தொடங்கிய பின்பு`படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இயக்குநர் பாலாவுக்கான பிடி தளர்ந்ததாகவும், அவரது முடிவுகளுக்கு எதிர்மறையான விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மகனின் அறிமுகத்தில் ஆர்வம் காட்டிய விக்ரம், படத்தைப் பார்த்த பின்பு அதை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிகிறது. அதனால், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறார் என்றார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்த செய்திக்குறிப்பில் ‘படத்தின் இறுதி வடிவத்தில் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டிக்கும் - தமிழ் வர்மாவுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்திருந்தது. இதனை விக்ரமுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், அதற்கு விளக்கத்தைத் தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அறிக்கையில் பாலா ‘இறுதி செய்த வர்மா திரைப்பட முதல் பிரதியில் தங்களுக்கு திருப்தியில்லை’ என தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்க மறுத்து, படைப்பாளியாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், தனது படைப்பில் எந்த மாற்றங்களையும் செய்ய அனுமதிக்க முடியாது என்பதை தயாரிப்பு தரப்பு ஏற்க மறுத்ததால் படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை” என்று விளக்கம் அளித்துள்ள ஒற்றை வரியில் அவரது ஆதங்கமும்- படைப்பாளியின் வலியும் தெரிகிறது.

அவர் இயக்குனராக அறிமுகமான சேது படம் தொடங்கி கடைசியாக வந்த தாரை தப்பட்டை படம் வரை கட்டற்ற சுதந்திரத்துடன் வணிக கணக்குகள் இன்றி படத்தை இயக்கியவர் பாலா. வேற்று மொழியிலிருந்து தமிழில் ரீமேக் செய்கிற போது அப்படியே காட்சி மாறாமல் படத்தை எந்த இயக்குனரும் இயக்குவது இல்லை. ரீமேக் செய்யப்படும் மொழி அம்மாநில கலாச்சாரம் - பண்பாடுகளை கவனத்தில் கொள்வது இயக்குனரின் பொறுப்பாகும். தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தை காட்சி மாறாமல் தமிழில் எடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு வயது வந்தோர் பார்க்கும் படமாகவே இருந்திருக்கும். இதனை செய்ய மறுத்த காரணத்தாலேயே வர்மா படம் கைவிடுகிறோம் என அறிவித்ததாக கூறுகிறது பாலா வட்டாரம். ‘அவர்களுக்கு இதனால் எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை. தன் மகன் எதிர்கால சினிமா வாழ்க்கைக்காக விக்ரம் தயாரிப்புக்கு ஆன செலவை தருவதாக உறுதி கொடுத்த பின்னரே படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்த போது இந்த உண்மைகளை மறைத்துவிட்டனர்’ என்கின்றனர் பாலாவுக்கு நெருக்கமானவர்கள்.

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு நட்சத்திரங்களை, தொழில்நுட்ப கலைஞர்களை, தயாரிப்பாளர்களை மாற்றுவது, மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய பாலா இயக்கிய படம் கைவிடப்படுகிறது என்ற அறிவிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து போக முடியாது.

ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும், இறுதி வடிவத்தையும் தீர்மாணிக்கும் உரிமை இயக்குனருக்கு மட்டுமே உரியது என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது வர்மா. வணிகமயமான, லாப நோக்கத்தை அடிப்படையாக கொண்ட தமிழ் சினிமாவில் பணம் இருப்பவர்கள் எடுக்கும் முடிவு இறுதியானது. படைப்பாளிகள் அவர்கள் விருப்பப்படி படத்தை எடுக்க முடியாது என்பதை பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது வர்மா .நல்ல சினிமாவை நேசிக்கும் விக்ரம் இதுவரை இது சம்பந்தமாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon