மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்!

தயவு செய்து சிரிங்க: மம்தாவை விமர்சித்து போஸ்டர்!

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மத்திய பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிபிஐ மற்றும் மோடி அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டார், மூன்று நாள் தர்ணாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர முதல்வர் டெல்லியில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார், இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ”சர்வாதிகாரத்தை அகற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்” பொது கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று ஆந்திர முதல்வர், மேற்கு வங்க முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி.கனிமொழி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதுதவிர பாஜகவுக்கு எதிரான பேரணிக்கு ஜந்தர் மந்தரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் திரண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜந்தர் மந்தர் பகுதி மக்கள் கடலாக காட்சி அளித்தது.

இதற்கிடையில் மம்தாவின் டெல்லி வருகையை விமர்சிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மம்தாவை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் தீதி, ”தயவு செய்து சிரியுங்கள், டெல்லிக்கு வரவேற்கிறோம், இங்கு மக்கள் மத்தியில் நீங்கள் பேசுவதை யாரும் தடுக்கமாட்டார்கள். நீங்கள் ஜனநாயகத்தில் இருக்கிறீர்கள்” என்று அச்சிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு அனுமதி மறுப்பு, அமித் ஷாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டும் விதமாக, உங்களை (மம்தா) வரவேற்கிறோம், யாரும் இங்கு நீங்கள் பேசவதை தடுக்கமாட்டார்கள் என்று சுட்டிக்காட்டி இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் ஜந்தர் மந்தர் சாலை, பேங் பவன் மற்றும் வின்ட்சர் பேலஸ் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon