மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

திறந்த காதுகள், திறந்த மனம்!

தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிபவர் பிரதீப். தாய் தந்தை இல்லாத அவர், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். பிரதீப் நல்ல திறமைசாலி. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பாட்டியைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்தார்.

இதனால் தன் அலுவலகம் இருக்கும் நகரத்துக்குப் பாட்டியை அழைத்துச் சென்றார் பிரதீப். அலுவலகத்தில் 10 பேர் கொண்ட குழுவில் பிரதீப் மட்டுமே பணி ரீதியாக அனுபவம் இல்லாதவர். அவர் கிராமத்திலிருந்து வந்ததால், பணியில் சற்று இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருந்தது. ஒருநாள் அலுவலகத்தில் பிரதீப்புக்கு முக்கியமான அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கிய புராஜெக்டுக்காக சில ஆலோசனைகளைக் கேட்டிருந்தனர். முதல் புராஜெக்ட் என்பதால் சிறந்த ஆலோசனைக் குறிப்புகளுடன் சென்றிருந்தார் பிரதீப். ஆனால் பணி அனுபவம் குறைவு , கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காரணம் காட்டி அவரது ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதர ஒன்பது பேரின் ஆலோசனைக் குறிப்புகள் மட்டும் தலைமை நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டன.

அன்று மாலை சோர்வுடன் வீடு திரும்பிய பிரதீப், அலுவலகத்தில் நடந்ததைப் பாட்டியிடம் பகிர்ந்தார். அப்போது, பாட்டி அவருக்கு ஒரு கதை சொன்னார்.

பாட்டி சொன்ன கதை

ஓர் ஊரில் ஒரு விஞ்ஞானி இருந்தார். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது அவரது எண்ணம். ஒரு நாள் அவருடைய கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அப்போது மாற்று டயரை மாட்டுவதற்காக பஞ்சரான டயரை கழற்றியபோது, நட்டுகளை கழற்றி எங்கோ வைத்துவிட்டார். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது விஞ்ஞானியின் வீட்டில் வேலை செய்த பணியாளர் ஒருவர், “மற்ற மூன்று டயர்கள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு நட்டை கழற்றி இதில் மாட்டிக்கொள்ளலாம். அதன் பிறகு கடைக்கு எடுத்துச் சென்று அனைத்து நட்டுகளையும் வாங்கிச் சரி செய்து கொள்ளலாம்” என்று ஆலோசனை வழங்கினார். இதைக் கேட்ட விஞ்ஞானி அசந்துபோனார். இது ஏன் நமது அறிவுக்கு எட்டவில்லை என்று யோசித்தார். உண்மையில், பாட்டி சொன்ன கதையைக் கேட்டு புத்துணர்வு அடைந்தார் பிரதீப்.

மறுநாள் அதீத உற்சாகத்துடன் அவர் அலுவலகம் சென்றார். அப்போது அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி வந்திருந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு பிரதீப்புக்குக் கிடைத்தது. பாட்டியின் கதையால் கிடைத்த தன்னம்பிக்கையுடன் பிரதீப் தன் ஆலோசனைகளில் ஒன்றிரண்டை அவரிடம் அழகாக எடுத்துச் சொன்னார். அவை அந்த மேலதிகாரிக்குப் பிடித்துப்போயின. அவருடைய ஆலோசனைகளை முழுமையாகக் கேட்ட பின்னர், முந்தைய நாள் பெறப்பட்ட குறிப்புகளைப் படித்தார்.

பிரதீப்பின் ஆலோசனைகளைப் பெருமளவில் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் குறிப்புகளை இறுதி செய்தார் அந்த மேலதிகாரி. இந்தக் குறிப்புகளைப் பின்பற்றும்படி ஒரு குழுவினரிடம் உத்தரவிட்டார். இதில், பிரதீப்பின் ஆலோசனையை நிராகரித்த குழுவின் தலைவரும் இருந்தார்.

திறமையை அடையாளம் காண்பது ஒரு கலை. முன்முடிவுகளோடு அணுகுபவர்களுக்குப் புதிய தரிசனங்கள் கிட்டுவதில்லை. தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதில்லை.

- கவிபிரியா

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon