மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பணம் கொடுத்தால் மக்கள் மனம் மாறாது: கே.எஸ்.அழகிரி

பணம் கொடுத்தால் மக்கள் மனம் மாறாது: கே.எஸ்.அழகிரி

தமிழக அரசு ரூ.2,000 பணம் கொடுத்தால் மக்கள் மனநிலை மாற மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி இதுகுறித்துப் பேசுகையில், “என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை விட தரிசு நிலங்களில், கடற்கரைப் பகுதிகளில் சோலார் மின்னுற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கலாம். பாரதிய ஜனதா அரசு ஜாதி, மத வேற்றுமைகளைப் பயன்படுத்தி இந்த தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் சிதைத்து வருகிறது. காந்தி மதச்சார்பற்றக் கொள்கையை கொண்டு வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் இதற்கு துணை போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற அணிகளை ஒன்று திரட்டி வருகிறோம்.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது கொள்கை ரீதியான அணி. தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும், ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு அமைப்பு வேண்டும். தமிழகத்தில் உள்ள பல திட்டங்களை முன்வைத்துதான் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் மதச்சார்பற்ற கூட்டணி தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றார்.

மேலும், “தேர்தலுக்கு முன்பு பணம் கொடுக்க வேண்டும் என்பதுதான் இங்கு கொள்கையாகவும், நடைமுறையாகவும் உள்ளது. மக்கள் அதையும் மீறி எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். தமிழக அரசு தற்போது கொடுக்கிற 2,000 ரூபாயால் மக்கள் மனம் மாற மாட்டார்கள். மத்திய அரசு 6,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விவசாயக் கடனால் தீர்வு ஏற்படாது என மோடி திருப்பூரில் கூறியிருக்கிறார். மோடிக்கு பொருளாதார, சமூக, விவசாய மற்றும் தொழில்துறைகளில் தெளிவான சிந்தனை கிடையாது. அதனால்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார். ஜிஎஸ்டி கொண்டு வந்தார், தோல்வியில் முடிந்தது. இந்த 2 அரசையும் அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon