மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சினிமா சதுரங்கம்: பகடை உருட்டப்படுவது யாருக்காக?

சினிமா சதுரங்கம்: பகடை உருட்டப்படுவது யாருக்காக?

தமிழ் சினிமா 365: பகுதி - 40

இராமானுஜம்

இந்திய சினிமாவில் சினிமா பைனான்சியர்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த மாநிலத்திலும் இல்லை. ‘எந்தப் படமாக இருந்தாலும் எங்கள் அமைப்பில் உள்ள எவருக்கும் கடன் பாக்கி இல்லை என்ற NOC எங்கள் சங்கத்தில் வாங்க வேண்டும்’ என்ற அறிவிப்பை தென்னிந்திய சினிமா பைனான்சியர்கள் சங்க தொடக்க நிகழ்வில் அறிவித்தது அக்மார்க் பைனான்சியர்கள் இல்லை.

‘சினிமா தொழிலில் அடிமட்ட ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கி, நீங்க சொன்னா மொத்த இன்டஸ்ட்ரியே சொன்னது மாதிரி’ என்று இப்போது ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிற அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற திருப்பூர் சுப்பிரமணி தான்.

நிலம் தனக்கு சொந்தமானாலும்; அதில் விவசாயம் செய்ய ஆகும் செலவுக்கு வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்துவதற்கு பொறுப்பையும் விவசாயியே ஏற்றாலும், விவசாயம் முடிவடைந்து அறுவடையான பொருட்களை என்ன விலைக்கு விற்பனை செய்வது அல்லது ஏலம் விடுவது என்பதை எந்த முதலீடும் செய்யாத; பொறுப்பும் ஏற்காத கமிஷன் கடைக்காரர் முடிவு செய்கிறார். அதனால் விவசாயி கடனாளியாகவே இன்றும் இருக்கிறார். அதே நிலைதான் சினிமா தயாரிப்பாளர்கள் நிலையும். இங்கு கமிஷன் கடை உரிமையாளர்களாக சினிமா பைனான்சியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அறிவிப்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிவையில் திருப்பூர் சுப்பிரமணி அறிவிக்க முடிந்ததற்கு காரணம் அடிமட்டத்திலிருந்து சினிமா தொழிலையும், அதன் சூட்சமங்களையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்ட சினிமா ஏகலைவன் என்று கூற தகுதியானவர் திருப்பூர் சுப்பிரமணி சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசுவார். விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராகப் பேசுவார். தயாரிப்பாளர்கள் நடத்தும் சினிமா விழாக்களில், நடிகர்களின் சம்பள உயர்வுக்கு எதிராகப் பேசுவார். அதனால் இவர் பேசுவதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

மர சட்டத்திற்குள் பொருத்தப்பட்ட திரை சீலை ஓவியன் விருப்பப்படி நிறங்களை உள்வாங்கியாக வேண்டும். அந்த நிலைதான் சுப்பிரமணிக்கும். சினிமா நாட்டாமைகளின் விருப்பபடி பகடை உருட்ட வேண்டியவராக சுப்ரமணி இருக்கிறார் என்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் திரையரங்கு தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் சுமார் 30 கோடி வரை இவரது பணம் படத்தயாரிப்புக்கு பைனான்ஸாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

கோவை ஏரியா விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் இரு வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி தோல்வியை தழுவினார். இப்பகுதியில் தொழில் ரீதியான இவரது போட்டியாளர் ராஜமன்னார் விநியோகஸ்தர் சங்க தலைவர் ஆனார். விநியோகஸ்தர்கள் கூட்டமைப்புக்குள் எந்த பொறுப்பிலும் இல்லாத சுப்ரமணிக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது எனக் கூறியதால் முக்கியத்துவத்தை இழந்தார் சுப்பிரமணி என்கின்றனர். இதனால் இவர் சினிமாவுக்கு கொடுத்திருந்த கடன்களை பட வெளியீட்டின் போது நெருக்கடி கொடுத்து வசூல் செய்ய இயலவில்லை. மாநில அளவில் தலைமை பொறுப்பு ஒன்றை கைப்பற்றி காய் நகர்த்தி செயலற்று இருந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு மாற்றாக திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கி தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

அந்தப் பதவியை வைத்து எந்த நாட்டாமைத் தனமும் இங்கு செய்ய முடியாது என்பதால் வாங்குகிற இடத்துக்கு பதிலாக கொடுக்கிற இடத்தின் தலைமைப் பதவியை கைப்பற்றினால் எப்படி என்று சுப்பிரமணி யோசித்ததில் உருவானதே தென்னிந்திய சினிமா பைனான்ஸியர்கள் சங்கம் என்கின்றனர் திரைத்துறையினர்.

தமிழ் சினிமாவில் அதிக அளவு பைனான்ஸ் கொடுத்திருப்பது மதுரை அன்பு செழியன். இதுவரை இப்படியொரு அமைப்பு தொடங்க அவர் விரும்பியதில்லை. அவர் தலைவர் ஆகாமல் திருப்பூர் சுப்பிரமணியை தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க என்ன காரணமாக இருக்கும். நாளை வரை காத்திருப்போம்.

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய கட்டுரை - கரன்ஸி விளையாட்டு: சிக்கவைக்கப்படும் தயாரிப்பாளர்கள்!

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon