மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

உயர்மின் கோபுரம்: கொள்ளையடிக்கத் திட்டம்!

உயர்மின் கோபுரம்: கொள்ளையடிக்கத் திட்டம்!

ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கத்தான் உயர்மின் கோபுரத் திட்டத்தைக் கொண்டுவருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க ஈரோடு, திருப்பூர், நாமக்கல் பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் இன்று (பிப்ரவரி 13) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும்.

இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க நினைக்கும் விவசாயிகளைக் காவல் துறை மிரட்டுகிறது. உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதமானது. காவல் துறையைப் பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, பயமுறுத்தி அவர்கள் நிலங்களை அவர்களுக்கே தெரியாமல் அபகரிக்கும் முயற்சி இது. 800 கிலோ வாட் மின்சாரத்தைக் கொண்டு போக வழியில்லை என்று தமிழக அமைச்சர் சொல்லுகிறார். ஆனால் பிரதமர் மோடி 1,100 கிலோ வாட் மின்சாரத்தை 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்ரிக்க கண்டத்துக்கு கொண்டுபோக ஏற்பாடு செய்வதாக வாரனாசியில் ஒன்றரை மாதங்களுக்கு முன்னால் கூறியிருக்கிறார்” என்றார்.

மேலும், “வன விலங்களுக்கும், காடுகளில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு வந்துவிடும் என்று கேரளாவில் பூமிக்கு அடியில் கேபிள் பதித்து 325 கிலோ வாட் மின்சாரத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள். பூமிக்கடியில் கொண்டுபோவதால் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பது அப்பட்டமான பொய். உயர்மின் கோபுரங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் பரிமாற்ற இழப்பால் அரசு கொள்ளையடிக்கலாம் என்பதால்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள். கேபிள் போட்டுவிட்டால் அவர்களால் கொள்ளையடிக்க இயலாது.

வேளாண் நிலத்தில் உயர்மின் கோபுரங்களை அமைத்துவிட்டால் சுமார் 70 மீட்டர் தொலைவுக்கு பயிர் செய்ய இயலாது. மனித உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. நிலத்தை யாரும் வாங்க முன்வர மாட்டார்கள். நிலத்தை வைத்து விவசாயிகளால் கடன் வாங்க இயலாது. இவ்வளவு பாதிப்புகள் இருக்கிற உயர்மின் கோபுர திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென்று தமிழக விவசாயிகள் சார்பில், உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon