மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

ரவுடி பேபி மீண்டும் சாதனை!

ரவுடி பேபி மீண்டும் சாதனை!

கொலவெறி பாடலின் சாதனையை சில நாட்களுக்கு முன்பு முறியடித்த ரவுடி பேபி பாடல், தற்போது மீண்டுமொரு சாதனையையும் படைத்துள்ளது.

தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, ரோபோ சங்கர், டோவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் மாரி 2. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் சில வட இந்திய வானொலிகளிலும் கூட இப்பாடல் ஒலிபரப்பப்படும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளது. ரவுடி பேபி பாடலின் வீடியோ கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று யூடியூபில் வெளியானது. இப்பாடல் வெளியானது முதலாகவே மிகவும் வைரலாகிவிட்டது. இப்பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.

இந்நிலையில் தற்போது இப்பாடலை சுமார் 20 கோடி பேர் யூடியூபில் பார்த்துள்ளனர். இதனால், தமிழ் சினிமாவில் 20 கோடி பேர் பார்த்த முதல் வீடியோ சாங் என்ற சாதனையை ரவுடி பேபி உருவாக்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்களின் பட்டியலில் ரவுடி பேபி பாடல் முதலில் உள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரவுடி பேபி பாடலை 20 கோடி பேர் பார்த்துள்ளனர். இதற்காக பிரபுதேவா, ஜானி மாஸ்டர், யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் குழுவினர், பாடகி தீ, சாய் பல்லவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon