மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

வனத் துறை கட்டுப்பாட்டில் சின்னதம்பி: உத்தரவு!

வனத் துறை கட்டுப்பாட்டில் சின்னதம்பி: உத்தரவு!

சின்னதம்பி யானையைப் பிடித்து வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியை ஒட்டிய பகுதிகளில் சுற்றிவரும் சின்னதம்பி யானையைப் பிடிப்பதற்கான முயற்சியில், கடந்த இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர் தமிழக வனத் துறையினர். நெல், கரும்பு, வாழைப் பயிர் சாகுபடி சின்னதம்பி யானையினால் பாதிப்பதாகப் புகார் தெரிவித்தனர் அங்குள்ள மக்கள். இந்த நிலையில் சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றத் தடை கோரியும், அதைப் பிடித்து முகாமில் வைத்துப் பராமரிக்க உத்தரவிடக் கோரியும், மீண்டும் காட்டுக்கே அனுப்ப உத்தரவிடக் கோரியும் பல்வேறு பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து வழக்குகளும் இன்று (பிப்ரவரி 13) மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். “இந்த விஷயத்தில் சின்னதம்பி யானையின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை செலுத்த வேண்டிய கடமை உள்ளது. சின்னதம்பி யானை விவசாயப் பயிர்களை உண்டு பழகிவிட்டதால், மீண்டும் காட்டிற்குக் கொண்டு செல்வது அவசியமற்றது. யானைகள் முகாமில் சின்னதம்பி யானை சிறப்பாகப் பராமரிக்கப்படும். ஓரிரு மாதங்களில் முகாமில் உள்ள மற்ற யானைகளுடன் பழக சின்னதம்பிக்குப் பயிற்சி அளிக்கப்படும்” என்று அவர் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.

வனப்பகுதியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பரவியுள்ள செங்கல் சூளைகளில் பனை மரங்கள் பயன்படுத்தபடுவதாகவும், அதன் வாசம் காரணமாகவே யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன என்றும் தலைமை வழக்கறிஞர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ஒரு மனித உயிர் கூட பலியாகக் கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

“சின்னதம்பியை யானையைப் பிடிக்கத் தமிழக வனத் துறை நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாகத் தலைமை வன பாதுகாப்பு அதிகாரி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். யானையைப் பிடிப்பதற்கு முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அப்போது சின்னதம்பியை எந்த வகையிலும் காயம் ஏற்படுத்திடக் கூடாது. அந்த யானையை முகாமுக்குக் கொண்டு செல்வதா அல்லது மீண்டும் காட்டுக்கு அனுப்புவதா என்பதைத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியே முடிவு செய்யலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சின்னதம்பியை நிரந்தரமாக யானைகள் முகாமில் வைப்பதா அல்லது காட்டிற்குள் அனுப்புவதா என்பது குறித்து பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, பிரதான வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon