மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

2,000 ரூபாய்: தடை கேட்டு வழக்கு!

2,000 ரூபாய்: தடை கேட்டு வழக்கு!

மக்களவைத் தேர்தலுக்காகவே 2,000 ரூபாய் சிறப்பு உதவியை தமிழக அரசு அறிவித்திருப்பதாகக் கூறி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் அறிவிப்பு வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தேர்தலை மனதில் வைத்தே இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று பொன்முடிக்கும் முதல்வர், துணை முதல்வருக்குமிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் 2,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பை எதிர்த்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் இன்று (பிப்ரவரி 13) முறையீடு செய்யப்பட்டது.

அதில், “மக்களவை தேர்தலுக்காகவே இந்த சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு புள்ளிவிவரங்களின்படி 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இல்லை. 11.9 சதவீதம் பேர் தான் உள்ளனர். ஆனால், எண்ணிக்கையை அதிகரித்து சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2018 -19 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 18 லட்சம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். ஆனால் 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கூறி தவறான கணக்கின் மூலம் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி சென்றடைய வேண்டும்” என்று கோரப்பட்டது. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon