மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தீர்ப்புகள் விற்கப்படும்: சாதாரண மனிதனின் போராட்டம்!

தீர்ப்புகள் விற்கப்படும்: சாதாரண மனிதனின் போராட்டம்!

சத்யராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கும் இந்தப் படம் த்ரில்லர் பாணியில் சமூகக் கருத்துகள் அடங்கிய படமாக உருவாகிவருகிறது. அறுபது வயதைக் கடந்த மனிதர் தனது மகளைக் காப்பாற்றுவதற்காக நடத்தும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. உடல்ரீதியாகத் தாக்கி பெண்ணை மீட்பது அவரது வயதுக்கு நம்பத்தகுந்ததாக இருக்காது என்பதால் அறிவுப்பூர்வமாக சத்யராஜ் கதாபாத்திரம் அவர்களை அழிப்பது போல் காட்டப்படவுள்ளது.

பாலிவுட்டில் நீரஜ் பாண்டே இயக்கிய ‘ஏ வெனஸ்டே’ திரைப்படத்தில் சாதாரண மனிதன் பலம் பொருந்திய கூட்டத்தை அழிக்கும் உத்தி கையாளப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியானது. அதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் பாணியிலேயே தீர்ப்புகள் விற்கப்படும் படம் உருவாகிவருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள இந்திரா காட்டன் மில்ஸில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்தப் படத்தில் தான் ரெட் மான்ஸ்ட்ரோ 8கே விஸ்டா விஷன், ரெட் வெப்பன் 8கே ஹீலியம் ஆகிய இரு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அஞ்சி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்திற்கு பிரசாத் இசையமைக்கிறார். ஹனிபீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon