மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ரஃபேல்: சிஏஜி அறிக்கை - அமளி ஆர்ப்பாட்டம்!

ரஃபேல்: சிஏஜி அறிக்கை - அமளி ஆர்ப்பாட்டம்!

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தணிக்கைக் குழுவின் (சிஏஜி) அறிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கும், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானிக்கும் தொடர்பிருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்றுகாலை 11.05 மணியளவில் மாநிலங்களவையில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சிஏஜி அறிக்கையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட 11 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய அரசு 2007ஆம் ஆண்டு 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க போட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், 2016ஆம் ஆண்டு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் 36 ரஃபேல் விமானங்களுக்கான செலவு 2.86 விழுக்காடு குறைவதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் குறுகிய காலத்தில் போர் விமானங்களைப் பெறவும் புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து மாநிலங்களவையில் நிலவிய கடுமையான அமளியால் நண்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல மக்களவையும் காலையில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு நிற ஆடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற மைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக இன்று மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசவுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon