மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

தூதரகங்களில் புகார்: நீதிமன்றம் கேள்வி!

தூதரகங்களில் புகார்: நீதிமன்றம் கேள்வி!

இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா என்பது பற்றி மத்திய உள் துறை, வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, அவினாஷ் உள்ளிட்ட நான்கு பேர் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாக ரஷ்ய நாட்டுக்குச் சென்றனர். எரிவாயு கசிவு காரணமாக, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது, அந்தக் கப்பலில் இருந்த பலர் உயிர் தப்பினர். ஆனால், இந்தியர்கள் நான்கு பேரின் நிலை என்னவானதென்று தெரியவில்லை.

அவர்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (பிப்ரவரி 12) இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியக் கடற்பரப்பில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கடலில் ஏற்படும் விபத்தினால் காயமடைந்தவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் மத்திய அரசிடம் கேட்டது.

“ஒவ்வொரு நாட்டிலும் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் சடலங்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டதா? இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் பிற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேருக்கு உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?” என்று நீதிபதிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டன. வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள், நிலுவையில் இருக்கும் வழக்குகள், அவை தொடர்பாக இந்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட சட்ட உதவிகள் குறித்தும் நீதிபதிகள் அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுப்பினர்.

“இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா? மொழிப் பிரச்சினை ஏதேனும் ஏற்படுகிறதா?” என்றும் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். வெளிநாடுகளில் இந்தியர்களின் சட்ட விரோதக் குடியேற்றத்தைத் தடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேட்ட நீதிபதிகள், காணாமல் போனவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் மத்திய உள் துறைச் செயலாளர், வெளியுறவுத் துறைச் செயலாளர், கப்பல் போக்குவரத்துத் துறை தலைவர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon