மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

தமிழகத்துக்குக் குறைந்த நிவாரண நிதி!

தமிழகத்துக்குக் குறைந்த நிவாரண நிதி!

இந்திய மாநிலங்களின் வறட்சி பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த அளவிலான நிதியுதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2017-18 வரையிலான மூன்று ஆண்டுகளில் மாநிலங்கள் சந்தித்த வறட்சி பாதிப்புக்கு இழப்பீடு கோரியிருந்தன. அதில் 19 சதவிகித நிதியுதவி மட்டுமே மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குக் கிடைத்துள்ளது. மேற்கூறிய மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,23,605 கோடி நிவாரணம் கோரப்பட்டிருந்த நிலையில், வெறும் ரூ.23,190 கோடி மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழகம்தான் குறைந்த அளவிலான நிவாரணம் பெற்றுள்ளதாக இந்த விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.39,565 கோடி நிவாரண நிதியைத் தமிழகம் கோரியிருந்த நிலையில், அதில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட 16,682 கிராமங்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில், அதில் 13,305 கிராமங்கள் மட்டுமே வறட்சி பாதித்த கிராமங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

இதர மாநிலங்களைப் பொறுத்தவரையில், ராஜஸ்தான் ரூ.21,648 கோடி நிவாரணம் கோரியிருந்த நிலையில், ரூ.2,387 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் ரூ.5,193 கோடி கோரியிருந்த நிலையில், ரூ.1,065 கோடி கிடைத்துள்ளது. அதிகபட்சமாக உத்தராகண்ட் மாநிலத்துக்கு 76 சதவிகித நிதி கிடைத்துள்ளது. அம்மாநிலத்துக்கு ரூ.9,197 கோடி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ரூ.4,372 கோடியும், மகாராஷ்டிர மாநிலம் ரூ.3,373 கோடியும் கோரியிருந்தன.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon