ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனிச் சிற்பக்கலை போட்டியில் பங்கேற்ற மூன்று இந்திய இளைஞர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் மூவருமே கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களிலிருந்து வந்த இந்த மூன்று கலைஞர்களும் ஜப்பானில் நடக்கும் பனிச் சிற்பக்கலை போட்டியில் பங்கேற்பதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை சுயமாகவே திரட்டி போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கு அரசின் ஆதரவோ, நிதியுதவியோ வழங்கப்படவில்லை. ஆனாலும், போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளனர்.
இப்போட்டியில், எட்டு வளர்ந்த நாடுகளிலிருந்து அனைத்து தேவையான உபகரணங்களுடனும், கருவிகளுடனும் 11 குழுக்கள் கலந்துகொண்டன. ஆனால் இந்தியக் குழுவிடம் தேவையான கருவிகளும், உபகரணங்களும் கூட இல்லை. மேலும், கடும் குளிரில் இந்தப் போட்டியில் தனது கலைத்திறமையை காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. பிப்ரவரி 6 முதல் 9 வரை நடைபெற்ற இப்போட்டியில், போதிய உபகரணங்கள் இல்லாமலேயே இந்தியக் குழு முதலிடத்தை பிடித்துவிட்டது. ரஷ்ய நாட்டை சேர்ந்த குழு இரண்டாம் இடத்தையும், தாய்லாந்தை சேர்ந்த குழு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
கடும் குளிர் காற்றுக்கு நடுவே, -25 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் இந்தியக் குழுவை சேர்ந்த ரவி பிரகாஷ், சுனில் குமார் குஷ்வகா, ரஜ்னிஷ் வெர்மா ஆகியோர் விஷ்ணுவின் வராஹ அவதாரத்தை (பன்றி அவதாரம்) பனிச் சிற்பமாக வடிவமைத்தனர். 4 மீட்டர் உயரத்தில், 3 மீட்டர் நீளத்தில், 3 மீட்டர் அகலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிற்பம் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆகையால் இச்சிற்பத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.