மாநகராட்சியாகும் ஓசூர் - நாகர்கோவில்!

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் சட்டமுன்வடிவு இன்று (பிப்ரவரி 13) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், என தற்போது வரை 12 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் நாகர்கோவில் மற்றும் ஓசூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கான, 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிகள், இரண்டாம் திருத்தச் சட்ட முன்வடிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார். நாளையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இந்தச் சட்ட மசோதா இன்று அல்லது நாளை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.