மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

யானைகள் வழித்தடம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!

யானைகள் வழித்தடம்: உச்ச நீதிமன்றம் கேள்வி!வெற்றிநடை போடும் தமிழகம்

யானைகள் வழித்தடத்தில் இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், நீலகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க வேண்டுமென்று, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யானைகள் வழித்தடத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட கட்டடங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சீல் வைக்கப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள், அப்பகுதியிலுள்ள நிறுவனங்கள், வீடுகளின் உரிமையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. தாங்கள் அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தங்களது வசிப்பிடம் இருக்கும் பகுதியைத் தமிழக அரசு தவறுதலாக யானைகள் வழித்தடமென்று குறிப்பிட்டுள்ளதாகவும், இதனால் தங்களது கட்டடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 13) நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யானை வழித்தடத்தில் இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்குக் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். “அந்த கட்டடங்கள் விதிகளை மீறி முறைகேடாகக் கட்டப்பட்டிருந்தன. அதனால்தான் யானைகள் வழித்தடத்தில் இல்லாவிட்டாலும், அவையும் அகற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தில் சீல் வைத்தோம்” என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் நிலை, அதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பது குறித்துத் தகவல் தெரிவிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 4 வாரங்களில் இது குறித்து விரிவான பதிலைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon