மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

காதலர் தினம்: வெளிநாடுகளில் தமிழக ரோஜா வாசம்!

காதலர் தினம்: வெளிநாடுகளில் தமிழக ரோஜா வாசம்!

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் கிருஷ்ணகிரியில் ரோஜா ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தில் ரோஜா மலர்களை காதலிக்கு வழங்குவதைக் காதலர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட இந்நாளில் ரோஜா மலர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ரோஜா மலர்கள் உற்பத்திக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர், தளி, கெலமங்கலம், பேரிகை ஆகிய பகுதிகளில் நிலவுவதால் அங்கு ரோஜா செடிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படுகிறது.

தாஜ்மகால், டோராக்ஸ், நோப்ளாக்ஸ், கார்னியா, பர்னியர், கோல்டு ஸ்ட்ரைக், அவலாஞ்ச், கார்பெட், டிராபிகன் மற்றும் ஃபர்ஸ்ட் ரெட் உள்ளிட்ட 35 வகையான ரோஜா மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் காதலர் தின சமயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பசுமைக்குடில் முறையில் இங்கு விவசாயிகள் ரோஜா மலர்களை உற்பத்தி செய்கின்றனர்.

இம்மாவட்டத்தில் இத்தொழிலில் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரேசில் மற்றும் குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு கிருஷ்ணகிரியிலிருந்து இரண்டரை கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

வழக்கமாக ஒரு பஞ்ச் (20 ரோஜாக்கள்) 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகும் எனவும், இந்த ஆண்டு ரூ.300 வரை விற்பனையானதாகவும் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon