மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

கிரிக்கெட் மைதானத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்!

கிரிக்கெட் மைதானத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்!

கிரிக்கெட் போட்டியின் போது களத்தில் எதிர் அணி வீரர்களைக் கிண்டல் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இரு வீரர்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம் சில நேரங்களில் எல்லை மீறப்படுவதும் உண்டு.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.

இப்போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர் கேப்ரியலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கேப்ரியல் ரூட்டை ஓரினச்சேர்க்கையைக் குறிப்பிடும்விதமாக விமர்சித்துள்ளார். அதற்கு ஜோ ரூட், " இதனைக் கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என்று ஸ்டம்பில் உள்ள மைக்கில் கூறியுள்ளார். கேப்ரியல் பேசியது மைக்கில் பதிவாகவில்லை.

போட்டியின் கள நடுவர்கள் தர்மசேனா மற்றும் ரோட் டாக்கர் ஆகியோர் கேப்ரியலை எச்சரித்தனர்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கவனித்து வரும் ஆட்டத்தின் போது சர்வதேச வீரர் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜோ ரூட்டின் முதிர்ச்சியான பதில் அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது. அந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 209 பந்துகளைச் சந்தித்து 111 ரன்களை குவித்து வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon